(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
புனித ரமழான் மாதத்தின் மாண்பை போற்றும் வகையில் அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வரும் ஹதீஸ் மஜ்லிஸ் நிகழ்வின் 15வது வருட நிகழ்வு அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடி வளாகத்தில் நாளை (21) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வின் தொடக்க வைபவத்தில் அப்ரார் பவுண்டேசனின் பணிப்பாளர் ஏ.எம். அக்ரம் (நழீமி) அவர்கள் விசேட சொற்பொழிவை நிகழ்த்தவுள்ளார்.
நாளை ஆரம்பமாகும் இம்மஜ்லிஸ் நிகழ்வு 2026 மார்ச் 12ஆம் திகதி வரை வெள்ளிக்கிழமையைத் தவிர்ந்த ஏனைய நாட்களில் தினமும் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறவுள்ளன.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கலந்துகொள்ளுதலை ஊக்குவிக்கும் வகையில் தனித்துவமான வினா விடைப் போட்டிகளும் பெறுமதியான பணப்பரிசுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இவ் ஹதீஸ் மஜ்லிஸ் நிகழ்வுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தரும் தலைசிறந்த உலமாக்களினால் நிகழ்த்தப்படும் மார்க்க உபன்யாசங்களினால் சமூக ஒழுக்கம், ஆன்மிக முன்னேற்றம், குடும்ப ஒற்றுமை ,போதை ஒழிப்பு , இன ஒற்றுமை, தாய் நாட்டை நேசிப்பதன் அவசியம் போன்ற துறைகளில் பொதுமக்கள் விழிப்புணர்வை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
ரமழான் மாதத்தின் ஆன்மிக சூழலை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய மார்க்க நிகழ்வாக இது அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
