Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

இலங்கை விமான சேவைகள் இடைநிறுத்தம்

Posted on February 28, 2026 by Admin | 354 Views

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள பாதுகாப்பு சூழ்நிலையைத் தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் உள்ள இலக்குகளுக்கான மற்றும் அப்பகுதி வான்வெளியை பயன்படுத்தும் விமானப் பயணங்களை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஶ்ரீலங்கா விமான சேவைகள் மற்றும் ஃபிட்ஸ் எயார்(FitsAir) தீர்மானித்துள்ளன.

மத்திய கிழக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் போர்ச் சூழ்நிலை காரணமாக பல வான்வெளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பை முன்னிறுத்தியே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமையால் பாதிக்கப்படக்கூடிய இலங்கையிலிருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் விமான சேவைகள் தொடர்பில் தேவையான ஒருங்கிணைப்புகளை மேற்கொள்ள சிவில் விமானப் போக்குவரத்து துறையால் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகமும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கப்டன் தமிந்த ரம்புக்வெல்லவின் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பயணிகள் விமான நிலையங்களுக்கு செல்லும் முன் தங்களது விமான சேவை நிறுவனங்களோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலையங்களோடு தொடர்புகொண்டு பயணத் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் தேவையற்ற அசௌகரியங்களையும் தாமதங்களையும் தவிர்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.