Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

110 கோடி பெறுமதியான போதைப் பொருளுடன் 22 பிக்குகள் கைது- 07 நாள் தடுப்பு காவலில்

Posted on April 26, 2026 by Admin | 139 Views

ரூபாய் 110 கோடிக்கு மேற்பட்ட பெறுமதியுடைய “குஷ்” மற்றும் “ஹேஷ்” போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (26) பிற்பகல் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து மேலதிக நீதவான் சுபானி அபேசேகர அவர்கள் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதற்கிடையில் இந்தக் குழுவை வழிநடத்தியதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் கம்பஹா – மீகஹமுல்ல பகுதியில் இன்று பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த காவி உடை அணிந்த 22 பேரும் நேற்று (25) இரவு சுமார் 10.11 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில், அவர்களிடம் இருந்த ஒரே மாதிரியான ஆனால் வெவ்வேறு நிறங்களில் காணப்பட்ட பயணப் பொதிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

அந்தப் பொதிகளில் கல்வி உபகரணங்கள், இனிப்புப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளதாக தோன்றினாலும், அவற்றுக்குள் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த “குஷ்” மற்றும் “ஹேஷ்” போதைப்பொருட்கள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து 22 நபர்களும் கைது செய்யப்பட்டனர். ஒவ்வொரு பயணப் பொதியிலும் சுமார் 5 கிலோகிராம் எடையுடைய போதைப்பொருள் மறைக்கப்பட்டிருந்ததாகவும் மொத்தமாக 112 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரே தடவையில் பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையாகக் கருதப்படுகிறது. மேலும் காவி உடை அணிந்த குழுவினர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

விசாரணைகளில் இந்தப் பயணத்திற்கான விமானச்சீட்டுகள், உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்பட்டதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர். பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் உள்ளதாகக் கூறப்பட்ட பயணப் பொதிகளை இலங்கைக்கு கொண்டு வருமாறு ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுறுத்தியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்தச் சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைத்த மூவர் கடந்த மாதம் மேலும் 12 பேரை தாய்லாந்திற்கு அழைத்துச் சென்றதுடன், அடுத்த மாதமும் இதேபோன்ற இன்னொரு குழுவை அனுப்பத் திட்டமிட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் மேற்பார்வையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதேவேளை மூன்று நிக்காயங்களின் மகாநாயக்க தேரர்கள் வெளியிட்ட அறிக்கையில் இந்தச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் குறித்து சம்பந்தப்பட்ட நிக்காயங்கள் வழியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.