Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

பலர் சிறைக்கு செல்லும் வருடமாக இது இருக்கும்

Posted on May 1, 2026 by Admin | 300 Views

நாட்டின் மக்களிடையே உருவாகியுள்ள எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் மேலும் வலுப்பெறும் வகையில் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசின் ஆட்சி முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போது, வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலிருந்தும் அரசுக்கு பரவலான ஆதரவு கிடைத்துவருவதாகக் குறிப்பிட்டார்.

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக உழைக்கும் மக்களை மையமாகக் கொண்ட அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மக்களின் நலனையும் ஆட்சியாளர்களின் வரப்பிரசாதங்களை கட்டுப்படுத்துவதையும் குறிக்கோளாகக் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சமீபத்தில் ஏற்பட்ட டித்வா புயலால் பெருந்தோட்ட மற்றும் விவசாய நிலங்கள் சேதமடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் விரைவான நிவாரண உதவிகளை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழ்நிலையால் எரிபொருள் மற்றும் உர விலைகள் அதிகரித்தபோதும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசாங்கம் தேவையான நிவாரணங்களை வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

அரசின் நிலைத்தன்மை மக்களின் நம்பிக்கையில்தான் நிலைகொண்டுள்ளதாக வலியுறுத்தியதுடன் எதிர்க்கட்சிகள் தற்போது சிதறிக் கிடப்பதாகவும் மே தினக் கூட்டங்களில் மக்களை திரட்ட முடியாத நிலையில் உள்ளதாகவும் ஜனாதிபதி விமர்சித்தார். தேசிய மக்கள் சக்தியின் கூட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பது மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடாக அவர் குறிப்பிட்டார்.

குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்காகவே மக்கள் தற்போதைய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்ததாக தெரிவித்ததுடன் சட்டம் அனைவருக்கும் சமமாக அமையும் என்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறினார். மேலும் ஊழல், மோசடி மற்றும் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் இது பலர் சிறைக்கு செல்லும் வருடமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

டித்வா புயலுக்காக 50,000 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டதையும் அதற்காக கடன் எடுக்கவோ புதிய நாணயங்களை அச்சிடவோ செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கல்வித் துறையில் தமிழ் மொழி ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் தமிழ் மொழி மூலம் கல்வியளிக்கும் கல்லூரிகளில் அதிகமான ஆசிரியர் மாணவர்களை சேர்க்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். மேலும், பெருந்தோட்டப் பகுதிகளின் வீதி வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மக்களும் அரசாங்கமும் இணைந்து செயல்படும் ஆட்சி முறை உருவாகியுள்ளதால் மக்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்தும் பணியில் அரசு தொடர்ந்து ஈடுபடும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.