Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

வனவிலங்கு புகைப்படக் கண்காட்சியினை முன்னாள் அமைச்சர் அதாஉல்லா ஆரம்பித்து வைத்தார்

Posted on May 2, 2026 by Admin | 307 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அக்கரைப்பற்று நகரின் கலை மற்றும் அறிவியல் வட்டாரங்களில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இயற்கை மற்றும் வனவிலங்கு உலகை பிரதிபலிக்கும் சிறப்பான ஒளிப்படக் கண்காட்சி ஹல்லாஜ் தகவல் வள மையத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று (01)ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புகழ்பெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞர் உவைஸ் முஹைதீன் அவர்களின் தனிநபர் கண்காட்சி “UNBOUND” யினை தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் அக்கரைப்பற்று முதல்வருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.

இக்கண்காட்சி மே 2,3 ஆகிய இரு தினங்களிலும் காலை 11.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும். நுழைவு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதனால் அனைவருக்கும் கலை அனுபவத்தை அணுகக்கூடிய களமாக இது அமைகிறது.

உவைஸ் முஹைதீன் அவர்களின் படைப்புகள் வெறும் புகைப்படங்களாக மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் அடர்ந்த காடுகளிலும் அவர் மேற்கொண்ட பயணங்களின் உயிரோட்டமான சாட்சிகளாக விளங்குகின்றன. ஒவ்வொரு படமும் பார்வையாளரை அந்தச் சூழலின் மையத்திற்கே கொண்டு செல்லும் ஆற்றலை கொண்டுள்ளது. விலங்குகளின் இயற்கையான நடத்தை, அரிய தருணங்கள், மற்றும் மனிதர் எட்டாத பரப்புகளின் அமைதியான அழகு ஆகியவை இதில் பிரதிபலிக்கின்றன.

இத்தகைய கண்காட்சிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை நினைவூட்டுவதோடு, இயற்கையின் மௌன மொழியை கலை வழியாக வெளிப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எம் இளம் தலைமுறையினருக்கு வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் இயற்கைச் சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு முக்கிய தளமாகவும் இது அமைகிறது.

இயற்கையையும் கலை நயத்தையும் ஒருங்கிணைக்கும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு இந்த கண்காட்சியை பார்வையிடுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.