தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவைத் தொடர்ந்து, 234 தொகுதிகளுக்கான முடிவுகள் கட்டம் கட்டமாக வெளியாகி வருகின்றன.
முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் கணக்கிடப்பட்டு வருகின்றன. மதியம் 12 மணி நிலவரப்படி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
கட்சியின் முக்கிய வேட்பாளர்களான விஜய், செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, பிரபு உள்ளிட்டோர் தங்களது தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளனர். இதற்கு மாறாக, தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சரவைச் சேர்ந்த பலரும் ஆரம்ப கட்டத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளனர். இந்த நிலைமை திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய கணக்கெடுப்பின் அடிப்படையில், தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 110 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 67 தொகுதிகளில் முன்னிலை வகிக்க, திமுக கூட்டணி 57 தொகுதிகளில் பின்தங்கியுள்ளது.
தொகுதி வாரியாக வெளியான தகவல்களில், எடப்பாடி தொகுதியில் அதிமுக கூட்டணித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளார். அதே நேரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாம் போட்டியிட்ட தொகுதியில் 4,718 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பாபு வெற்றி பெற்றுள்ளார்.
ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளரும் சபாநாயகருமான அப்பாவும் தோல்வியடைந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சதீஷ் கிறிஸ்டோபர் அங்கு வெற்றி பெற்றுள்ளார்.
தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஸ்ரீநாத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் கீதா ஜீவனை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.
மேலும் இதுவரை எண்ணப்பட்டுள்ள 2.88 கோடி வாக்குகளில் தமிழக வெற்றிக் கழகம் மட்டும் ஒரு கோடி வாக்குகளைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மேலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் விஸ்வநாதன் வெற்றி பெற்றுள்ளார். இது இத்தேர்தலில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் வெற்றியாகும்.
மொத்தப் போக்கை கண்காணிக்கையில் தமிழக அரசியல் நிலவரத்தில் முக்கிய மாற்றங்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.