Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Posted on May 6, 2026 by Admin | 333 Views

2025/2026 கல்வியாண்டிற்கான அரச பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைக்கும் நடவடிக்கைகள் 2026 செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (06) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து மாணவர் பதிவுப் பட்டியல்கள் அனைத்தும் 2026 ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்படும் என கூறினார்.

அதனைத் தொடர்ந்து பாடநெறிகளை ஆரம்பிக்கும் திகதிகளை ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தனித்தனியாக நிர்ணயிக்கும் என்றும் அவர் விளக்கினார்.

2025/2026 கல்வியாண்டிற்காக இரண்டு புதிய பட்டப் பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். அதன்படி ருஹுணு பல்கலைக்கழகத்தில் புவியியல் தகவல் அமைப்பு (GIS) பாடநெறிக்காக 50 மாணவர்களும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் மற்றும் புத்திசார் அமைப்பு பொறியியல் பாடநெறிக்காக மேலும் 50 மாணவர்களும் சேர்க்கப்பட உள்ளனர்.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு 281,810 மாணவர்கள் தோற்றியுள்ள நிலையில் அவர்களில் 176,538 பேர் பல்கலைக்கழக சேர்க்கைக்குத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 42,937 மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை முதற்பட்டப் பாடநெறிகளுக்காக இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாதபோதிலும் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தி தரமான மற்றும் பயனுள்ள கல்வி சூழலை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் மேலும் உறுதியளித்தார்.