தமிழகத்தில் புதிய அரசை அமைக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் பெரும்பான்மை ஆதரவை நிரூபித்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் அர்லேகர் அனுமதி வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்ளக விளையாட்டரங்கில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் மேலும் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று மாலை 6.30 மணியளவில் விஜய் ஆட்சியமைக்கும் உரிமையை கோரி தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து ஆதரவு கடிதங்களை சமர்ப்பித்தார். அந்தச் சந்திப்பில் கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தமிழகத்திற்கான ஆளுநர் கேரளா செல்ல திட்டமிட்டிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டு விஜய்யை சந்திக்கும் நிகழ்வுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தன. இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்தது. மேலும், முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவும் கிடைத்ததன் மூலம் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 120 ஆசனங்களாக உயர்ந்தது.
இதையடுத்து பெரும்பான்மை ஆதரவுடன் ஆளுநரை சந்தித்த விஜய் தலைமையிலான கூட்டணிக்கு ஆட்சியமைக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது தமிழக அரசியலில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.