Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

ஜனாதிபதி கலந்துகொள்ளும் அம்பாறை மாவட்ட ஒருக்கிணைப்பு குழுக்கூட்டத்தில் உதுமாலெப்பை எம்பியினால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணைகள்

Posted on May 21, 2026 by Admin | 367 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

ஜனாதிபதி கலந்துகொள்ளும் அம்பாறை மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை(22) பி.ப 02:00 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள நிலையில் அதில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களினால் பல முக்கிய அபிவிருத்தி மற்றும் விவசாய தொடர்பான பின்வரும் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

சம்புக்களப்பு தில்லையாறு மற்றும் கரைவாகுப்பற்று வடிச்சல் திட்டங்களை நிரந்தரமாக புனரமைப்பதன் மூலம் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, திருக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்காணிகளை மீட்டு அதிக விளைச்சல் பெறக்கூடிய வடிச்சல் திட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது.

பொத்துவில் மற்றும் திருக்கோவில் பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் நீர்ப்பாசன வசதி வழங்க ஹெட்ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தை மீள ஆரம்பிக்க அல்லது வடமூசா குளத்தை புனரமைப்பது தொடர்பான கோரிக்கையும் முன்வைக்கப்படவுள்ளது.

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை முழுமையாக செயல்படுத்துவதன் மூலம் ஆழ்கடல் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி மாவட்ட பொருளாதாரத்திற்கு தினசரி கோடிக்கணக்கான வருவாய் ஈட்டுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.

ஹிங்குறான சீனித் தொழிற்சாலை தொடர்பாக நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகள் காரணமாக கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கரும்பு செய்கைக்கு பதிலாக நெல் உள்ளிட்ட வேளாண்மை செய்கைகளுக்கு காணிகளை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் போன்ற பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளன.