Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி சிறையில் தற்கொலை

Posted on May 25, 2026 by Admin | 165 Views

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

46 வயதுடையவரான இவர் நேற்று (24) இரவு சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு உயிரிழந்ததாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015 ஆம் ஆண்டு மே 13 ஆம் திகதி பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட ஏழு பேருக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழாம் 2017 செப்டம்பர் 27 ஆம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கோரி குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தனர். மேன்முறையீட்டு விசாரணைகள் நடைபெற்று வந்த காலத்தில் பிரதிவாதிகளில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இதனிடையே “சுவிஸ் குமார்” என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் உள்ளிட்ட நான்கு பேரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடுகளை உயர் நீதிமன்றம் கடந்த 6 ஆம் திகதி நிராகரித்தது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தது.

வழக்கின் ஏனைய இரு பிரதிவாதிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகள் நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் பிரதான சந்தேகநபராக கருதப்பட்ட “சுவிஸ் குமார்” உள்ளிட்ட ஏழு பேர் சம்பவத்துக்குப் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.