(அட்டாளைச்சேனை செய்தியாளர்-வாஜித்)
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 11 ஆவது அமர்வின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை நேரில் கண்டுகளிக்கும் நோக்கில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்கள் விசேட கல்விசார் களப்பயணம் (சுற்றுலா) ஒன்றினை 2026.05.21ஆம் திகதி மேற்கொண்டிருந்தனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களின் கட்டமைப்பு, அதன் செயல்முறைகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் விவாதப் பண்புகள் குறித்து மாணவர்களுக்கு நடைமுறை ரீதியிலான அறிவை வழங்கும் நோக்குடனேயே இக்களப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சபையின் 11 ஆவது அமர்வை மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவர்களை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் மிகவும் அன்போடு வரவேற்றனர். அமர்வினை பார்வையிட வருகை தந்திருந்த மாணவர்களுக்கான விசேட சிற்றுண்டி உபசாரங்களை தவிசாளர் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார்.
மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் சபை உறுப்பினர்களான கௌரவ ஏ.எல்.பாயிஸ், கௌரவ ஐ.எல்.அஸ்வர் சாலிஹ் மற்றும் கௌரவ எஸ்.எம்.ரியாஸ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான விசேட நினைவுப் பரிசில்களையும் வழங்கி கௌரவித்தனர். இச்சந்திப்பின் போது உள்ளூராட்சி சபையின் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால சமூகத் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்தும் மாணவர்கள் அறிவினைப் பெற்றுக்கொண்டனர்.
இக் களப்பயணத்தில் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். அஜ்மீர் தலைமையில் ஆசிரியர்களான ஏ.டபிள்யு. நிஹார் மற்றும் என்.எம். நஜாத் ஆகியோரும் பங்கேற்று மாணவர்களுக்கு வழிகாட்டினர்.




