(ஏறாவூர் செய்தியாளர்)
மட்டக்களப்பு- ஏறாவூர் நீதிமன்ற வீதியிலுள்ள வீடு ஒன்றின் குளியலறைத் தண்ணீர்த் தொட்டிக்குள் இருந்து 11 வயதுச் சிறுமி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் அவரது சொந்தச் சகோதரனை ஏறாவூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் அச்சிறுமி தனது தந்தை மற்றும் சகோதரனுடன் இந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த வியாழக்கிழமையன்று தந்தை வெளியில் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் இருந்த சிறுமிக்கும் அவரது சகோதரனுக்கும் இடையே டிக்டொக் (TikTok) காணொளி பார்ப்பதற்காகத் கைத்தொலைபேசியைப் பகிர்ந்துகொள்வதில் திடீரெனத் தகராறு ஏற்பட்டுள்ளது.
தங்கையிடம் கைத்தொலைபேசியைக் கேட்டபோது அவர் அதனைக் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே ஏற்பட்ட மோதலே இந்த விபரீத மரணத்திற்குக் காரணம் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பில் சிறுமியின் சகோதரன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் சிறுமியின் மரணம் கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்த இறுதி முடிவை அறிந்துகொள்வதற்காக சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.