Top News
| தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு |
Oct 15, 2026

அதிரடியாக எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்

Posted on June 3, 2026 by Admin | 221 Views

உலகளாவிய எரிசக்தி வர்த்தக சந்தையில் அமெரிக்க மசகு எண்ணெய் மற்றும் ப்ரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் கணிசமான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

அமெரிக்க மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 1.26 டொலரால் சரிவடைந்து 90.90 டொலராகப் பதிவாகியுள்ளது. அதேபோல் சர்வதேச தரநிலையாகக் கருதப்படும் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலையும் 1.26 டொலரால் வீழ்ச்சி கண்டு ஒரு பீப்பாய் 93.72 டொலராக விற்பனையாகிறது.

இந்த விலை வீழ்ச்சி நுகர்வோருக்குச் சற்று ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும் தற்போதைய சந்தை நிலவரங்கள் உக்ரைன்-ரஷ்ய யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னர் காணப்பட்ட உத்தேச 70 டொலர் விலையை விடவும் மிக அதிக மட்டத்திலேயே நீடிக்கின்றன. இதனால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி இன்னும் முழுமையாகத் தீரவில்லை என்றே பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

வளைகுடா பிராந்தியத்தில் இருந்து எண்ணெய் விநியோகத்தை தடையின்றி மீண்டும் ஆரம்பிப்பதற்கும் உலகளாவிய பணவீக்க அழுத்தத்தைக் குறைப்பதற்கும் சர்வதேச நாடுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இச் சூழலில் முக்கிய வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மறுபடி திறப்பது குறித்து அமெரிக்காவும் ஈரானும் எட்டவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்பாட்டைப் பொறுத்தே உலக சந்தையில் மசகு எண்ணெயின் அடுத்தகட்ட விலை நிலவரங்கள் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம் ஜப்பான் தனது நாட்டின் ஒட்டுமொத்த எண்ணெய் தேவையையும் இறக்குமதியையே நம்பியிருக்கும் ஒரு நாடாகும். இருப்பினும் உலக சந்தை ஏற்ற இறக்கங்களைச் சமாளிக்க ஜப்பான் தனது தேசிய கையிருப்பு எண்ணெயை (National Strategic Reserves) உள்நாட்டுச் சந்தைக்கு விடுவித்துள்ளது. இதன் காரணமாக அங்கு பெட்ரோல் மற்றும் ஏனைய எரிபொருட்களின் உள்நாட்டு விலைகளில் ஏற்படும் தாக்கம் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய மசகு எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் தங்களது உற்பத்தி நடவடிக்கைகளைக் கடுமையாகக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளதாகப் பிரபல சந்தை ஆய்வாளர் ஸ்டீபன் இன்னஸ் (Stephen Innes) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் எச்சரிக்கையில்,
இந்த எரிசக்தி நெருக்கடியானது வெறும் மசகு எண்ணெய் இருப்புடன் மட்டும் நின்றுவிடாது பொருளாதாரங்களை இயக்கும் முக்கிய எரிபொருட்களான பெட்ரோல், டீசல், ஜெட் எரிபொருள், எல்.பி.ஜி (LPG) மற்றும் நெப்தா (Naphtha) ஆகியவற்றின் விநியோகத்தையும் இது கடுமையாகப் பாதிக்கும்.

எனவே தற்போதைய விலை வீழ்ச்சி தற்காலிகமானதாகவே பார்க்கப்படுகிறது என்றும் எதிர்வரும் வாரங்களில் உலக அரசியல் நகர்வுகளே உலகப் பொருளாதாரத்தின் திசையைத் தீர்மானிக்கும் என்றும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.