Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

38 ஆண்டுகள் கல்விச் சுடரேற்றிய ஆசான் றிபாஸ் ஏ. ஆசீஸ் அவர்களின் பிரியாவிடை நிகழ்வு

Posted on June 11, 2026 by Admin | 160 Views

(அக்கரைப்பற்று செய்தியாளர்)

கல்விப்புலத்தில் முப்பத்தெட்டு வருடங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் சிரேஷ்ட உயர்தர ஆசிரியரும், உதவி அதிபருமான றிபாஸ் ஏ. ஆசீஸ் அவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நெகிழ்ச்சியான நிகழ்வு கடந்த 09ம் திகதி செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் அதிபர் ஜே. ஆர். டேவிட் அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் மிக விமரிசையாக நடைபெற்றது.

இப்பிராந்தியத்தின் பல்லின பண்பாட்டு நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தமை அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது.

ஓய்வுபெற்றுச் செல்லும் உப-அதிபர் றிபாஸ் ஏ. ஆசீஸ் மற்றும் அவரது துணைவியார் ஆகியோரை கௌரவிக்கும் முகமாக பாடசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மலர்மாலை அணிவித்து மாணவர்களின் பெருவரவேற்புடன் அவர்கள் பாடசாலை வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

பாடசாலையின் காலை ஒன்றுகூடலின் போது 38 வருடங்களாக ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிரச்செய்த றிபாஸ் ஏ. ஆசீஸ் ஆசிரியரின் சேவையைப் பாராட்டி மாணவர்களினாலும் சக ஆசிரியர்களினாலும் அவருக்கும் அவரது துணைவியாருக்கும் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு பொன்னடை போர்த்தி மிக உன்னதமான முறையில் கௌரவிப்பு வழங்கப்பட்டது.

இவர் தனது 38 வருட நீண்ட ஆசிரியர் சேவையில் கடந்த 8 வருடங்களாக அக்கறைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் உயர்தர மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், பாடசாலையின் நிர்வாகக் கட்டமைப்புக்கும் உதவி அதிபராக இருந்து ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது என அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தமது வாழ்த்துரைகளில் நன்றியோடு நினைவு கூர்ந்தனர்.

38 வருடங்களாக கல்விச் சுடரேற்றிய ஓர் உன்னத ஆசானுக்கு சமய மற்றும் இன எல்லைகளைக் கடந்து அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி சமூகம் நன்றிக் கடனைச் செலுத்திய விதம் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.