Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் “சிறு குற்றங்கள்” விழிப்புணர்வு கருத்தரங்கு

Posted on June 17, 2026 by Admin | 188 Views

(ஒலுவில் செய்தியாளர்- சான்)

அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் இயங்கும் சமுதாய சீர்திருத்த திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவர்களுக்கான “சிறு குற்றங்கள்” விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (17) பாடசாலை வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்கள் மத்தியில் குற்றச்செயல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.எல்.அப்துல் ஜப்பார் தலைமையில் இடம்பெற்றது. இதில் தரம் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இக்கருத்தரங்கில் சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.இக்றாம் விசேட வளவாளராகக் கலந்துகொண்டு சிறப்பான உரை நிகழ்த்தினார். அவர் மாணவர் பருவத்தில் அறியாமல் செய்யக்கூடிய சிறு குற்றங்கள், அவற்றின் சட்டரீதியான விளைவுகள் மற்றும் சமூகத் தாக்கங்கள் குறித்து விரிவான விளக்கங்களையும், ஆலோசனைகளையும் மாணவர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.ஏ.கமறுந்நிஸா, ஜே.வஹாப்தீன் ஆகியோருடன், சமுதாய சீர்திருத்த திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.ஐ.எப்.நிபாஸா, ஏ.ஜே.எப்.றினாபா மற்றும் தரம்-11 வலயத் தலைவர் எம்.சி. நஸ்றுடீன் ஆகியோரும், பாடசாலை ஆசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.