Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்தாலும் உள்நாட்டில் விலை குறைவது குறித்து பிரதி அமைச்சர் விளக்கம்

Posted on June 17, 2026 by Admin | 199 Views

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும் அதற்கு இணையாக உள்நாட்டில் தற்போதைக்கு எரிபொருள் விலைகளைக் குறைக்க முடியாது என்று தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17) நடைபெற்ற நாட்டின் பொருளாதார நிலைமை குறித்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார்.

தற்போது நாட்டில் நுகரப்பட்டு வருவது கடந்த காலங்களில் அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருளாகும். எனவே, அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்த எரிபொருள் கையிருப்பு தீரும் வரை உள்நாட்டில் விலைகளைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனினும் இந்த பழைய கையிருப்பு தீர்ந்த பின்னர் விலை திருத்தம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இறுதியாக ஓர்டர் செய்த பெற்றோல் மற்றும் டீசல் விலைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் விலைக்குறைப்பு சாத்தியமா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், எதிர்காலத்தில் நாட்டுக்கு கிடைக்கவுள்ள எரிபொருள் கடந்த மாதங்களில் கொள்வனவு செய்யப்பட்டவை என்பதால் குறைந்த விலையிலான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு இன்னும் சில காலம் எடுக்கும் என்றார்.

எதிர்வரும் நாட்களில் உலக சந்தை நிலவரப்படி விலை குறையும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கமைய தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நீக்காமல் இதே விலையைத் தொடர்ந்து பேணுவதா அல்லது விலையைக் குறைப்பதா என்பது குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.