அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்களாட்சியின் ஆகச்சிறந்த ஆயுதமாகவும், அரச நிர்வாகத்தின் முகமூடிகளைக் கிழித்து வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்தும் ஒரே நம்பிக்கையாகவும் இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) ஆகும். ஆனால் இந்தச் சட்டத்தின் மாண்பையும், அதன் நோக்கத்தையும் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் முற்றாகக் கேலிக்கூத்தாக்கி, குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துள்ளதா என்ற பலத்த சந்தேகம் இப்போது பொதுமக்கள் மத்தியில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது.
அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் கடமையாற்றும் சர்ச்சைக்குரிய ஓர் SLEAS (இலங்கை கல்வி நிர்வாக சேவை) அதிகாரி தொடர்பான அதிமுக்கியமான தகவல்களைக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (RTI) கடந்த 2026.04.29ம் திகதி தகவல் அலுவலகருக்கு விண்ணப்பம் ஒன்று அனுப்பப்பட்டது. 20 நாட்கள் கடந்தும் வலய அலுவலகத்திலிருந்து மயான அமைதியே பதிலானது.
இந்த அலட்சியத்தைத் தட்டிக்கேட்கும் வகையில் 2026.05.18ம் திகதி (முன்னாள்) வலயக் கல்விப் பணிப்பாளருக்கு மேல்முறையீட்டு வடிவில் மீண்டும் விண்ணப்பம் அனுப்பப்பட்டது. ஆனால் 21 நாட்கள் கடந்தும் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் எந்தவொரு தகவலையும் வழங்காமல் ஓய்வுபெற்றுச் சென்றார்.
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு 42 நாட்கள் கடந்த நிலையில் புதிதாகப் பதவியேற்ற வலயக் கல்விப் பணிப்பாளராவது நீதி வழங்குவார் என நம்பி 2026.06.08ம் திகதி நினைவூட்டல் கடிதமும் அனுப்பப்பட்டது. ஆனால் புதிய பணிப்பாளரும் பழைய அதிகாரிகளின் பாதையையே தேர்ந்தெடுத்துள்ளார்.
மூன்று முறை கதவு தட்டியும் 54 நாட்கள் கடந்தும் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத் தரப்பிலிருந்து எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை. இந்த 54 நாட்களின் மெத்தனப் போக்கானது சட்டத்தின் மீதான அப்பட்டமான தாக்குதலாகும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி ஒரு குடிமகன் கோரும் தகவல்களை 14 நாட்களுக்குள்ளோ அல்லது ஆகக்கூடுதலாக 21 நாட்களுக்குள்ளோ வழங்க வேண்டும் என்பது மீற முடியாத சட்ட விதியாகும். அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் இந்நீண்ட மௌனம் என்பது தற்செயலானது அல்ல.
RTI ஊடாகத் தகவல் கோரப்பட்டுள்ள குறிப்பிட்ட SLEAS அதிகாரியின் பின்னணியில் இருக்கும் கருப்புப் பக்கங்கள் வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காக குறித்த SLEAS அதிகாரியுடன் நெருக்கமான உறவினைப் பேணிவரும் வேறு சில அதிகாரிகள் அரணாக நின்று அவரைக் காப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டத்தை மதித்து முன்மாதிரியாக நடக்க வேண்டிய ஒரு கல்வித் திணைக்களம், சட்ட வரம்புகளை மீறிச் செயற்படுவது “நாங்கள் சட்டத்திற்கும் மேலானவர்கள், எங்களை யாரும் அசைக்க முடியாது” என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது.
தங்களது கடமைகளை வெளிப்படைத்தன்மையுடன் செய்ய வேண்டிய அதிகாரிகள் அதை விடுத்து கேட்கப்படும் விபரங்களைத் தராமல் இழுத்தடிப்பதானது, “குறித்த அதிகாரியின் தவறுகளுக்கு ஏனைய அதிகாரிகளும் கவசமாகச் செயற்பட்டு குற்றங்களை மூடிமறைக்கிறார்கள்” என்ற விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நபரின் தவறை மறைக்க பலர் முட்டுக்கொடுப்பது எந்த வகையில் நியாயமாகும்?
பொதுமக்களின் விண்ணப்பங்களைக் குப்பைத் தொட்டிக்குள் எறிவது போலக் கிடப்பில் போடுவது மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் சர்வாதிகாரப் போக்காகும்.
ஒரு சாதாரண குடிமகன் சட்ட ரீதியாகக் கோரும் தகவலை அதிகாரிகள் மறைக்க முற்படுவதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? குறித்த SLEAS அதிகாரி மீது ஏதேனும் முறைகேடுகள் அல்லது முறையற்ற செயல்பாடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் உள்ளனவா? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளன.
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் இந்த மௌனப் பெருங்கடல் மக்கள் மத்தியில் இந்த நிர்வாகத்தின் மீது பாரிய விமர்சனத்தை எழுப்பியுள்ளது. தகவல் தராமல் இழுத்தடிப்பதன் மூலம் தற்காலிகமாக அந்த அதிகாரியைக் காப்பாற்றிவிடலாம் என்று அதிகாரிகள் கணக்குப்போட்டால் அது பகற்கனவாகவே முடியும்.ஏனெனில் இதற்கு அடுத்த கட்டமாக தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு (RTI Commission) வரை இந்த விவகாரத்தைக் கொண்டு செல்ல முடியும்.
இனியும் காலத்தைக் கடத்தாமல் குறித்த SLEAS அதிகாரி தொடர்பாக கோரப்பட்ட தகவல்களை வழங்குவது சிறந்த நிர்வாகத்தின் திறமையாகும். இல்லையேல் சட்டத்தின் முன் இது கொண்டு செல்லப்படுவது தவிர்க்க முடியாததாகும்.