Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி சாதாரண தரப் பரீட்சையில் வரலாற்றுச் சாதனை

Posted on June 22, 2026 by Admin | 372 Views

(அக்கரைப்பற்று செய்தியாளர்- றாஜி)

அக்கரைப்பற்று மண்ணின் கல்விக் கலங்கரை விளக்காகத் திகழும் அக்/அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அண்மையில் வெளியான 2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகால பரீட்சை வரலாற்றுடன் ஒப்பிடுகையில் இம்முறை பாடசாலை அடைந்துள்ள தேர்ச்சி வீதமானது பிராந்திய ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு 54% சதவீதமாகக் காணப்பட்ட பாடசாலையின் ஒட்டுமொத்த தேர்ச்சி வீதம் இம்முறை வியக்கத்தக்க வகையில் 80% சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய 135 மாணவர்களில் 108 மாணவர்கள் உயர்தரக் கல்வியைத் தொடர்வதற்காக மிகச் சிறந்த புள்ளிகளுடன் தகுதி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மாணவர்களின் தனிப்பட்ட திறமைப் புள்ளிகளின் அடிப்படையில் 06 மாணவர்கள் 9A பெறுபேறுகளையும், 02 மாணவர்கள் 8A பெறுபேறுகளையும், 03 மாணவர்கள் 7A பெறுபேறுகளையும் பெற்றுள்ளனர். அத்தோடு, 05 மாணவர்கள் 6A பெறுபேறுகளையும், 07 மாணவர்கள் 5A பெறுபேறுகளையும் பெற்று பாடசாலையின் அடைவு மட்டத்தை உறுதி செய்துள்ளனர்.

பாட வாரியான தேர்ச்சி விகிதங்களிலும் இம்முறை மாணவர்கள் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக புவியியல், சிங்களம், அரபு இலக்கியம், விவசாயம் மற்றும் வடிவமைப்பு தொழில்நுட்பம் ஆகிய 5 பாடங்களில் 100% முழுமையான தேர்ச்சி பதிவாகியுள்ளது. மேலும், தகவல் தொழில்நுட்பம் (97.96%), வணிகக் கல்வியும் கணக்கீடும் (97.22%), இஸ்லாம் (97.04%), ஆங்கிலம் (97.04%), வரலாறு (96.30%), தமிழ் மொழி (95.56%), தமிழ் இலக்கியம் (94.03%), சுகாதாரமும் உடற்கல்வியும் (92.86%) மற்றும் குடியியல் கல்வி (92.41%) ஆகிய பாடங்கள் மிக உயர்வான தேர்ச்சி விகிதங்களைப் பதிவு செய்துள்ளன.

மாணவர்களுக்கு சவாலாகக் கருதப்படும் முதன்மைப் பாடங்களான விஞ்ஞானம் (83.70%), ஆங்கில இலக்கியம் (83.33%), கணிதம் (82.22%) மற்றும் சித்திரக்கலை (82.22%) ஆகியவற்றிலும் 80% க்கும் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்து அசத்தியுள்ளனர்.

இக்கல்விப் புரட்சி மற்றும் மகத்தான சாதனைக்குக் காரணகர்த்தாக்களாக விளங்கிய அதிபர், பிரதி அதிபர்கள், தமிழ் மற்றும் இருமொழி (Bilingual) மூல 10, 11ஆம் தர வலயத் தலைவர்கள், பிரதி வலயத் தலைவர்கள், பாட இணைப்பாளர்கள், பாட ஆசிரியர்கள் மற்றும் விசேட மேலதிக வகுப்புகளை நடாத்தி மாணவர்களை வழிப்படுத்திய கற்பித்தல் ஊழியர்கள் அனைவருக்கும் கல்லூரி சமூகம் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

இம்மாபெரும் வெற்றிக்கு தொடர் வழிகாட்டல்களை வழங்கிய வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDEC), பழைய மாணவர் சங்கம் (PPA), பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கம் (UGAA), APEC அமைப்பினர், ஏனைய நலன் விரும்பிகள் மற்றும் மாணவர்களின் கல்விக்கு அர்ப்பணிப்புடன் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும், சாதனை படைத்த மாணவச் செல்வங்களுக்கும் கல்லூரி நிர்வாகம் சார்பாக வாழ்த்துகளும் நன்றிகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.