Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

ஞானசார தேரரின் மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு- 09 மாத சிறைத்தண்டனை உறுதி

Posted on June 23, 2026 by Admin | 156 Views

இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையிலும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலும் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த இந்தச் சிறைத்தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஞானசார தேரரினால் மேல்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், அந்த மனுவை நிராகரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு கிருலப்பனைப் பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது, இஸ்லாமிய மார்க்கத்தை அவமதித்து இன நல்லிணக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பேசியதாகக் குற்றம் சுமத்தி தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் பொலிஸாரால் இவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

நீண்ட விசாரணைக்குப் பின்னர் ஞானசார தேரர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த 9 மாத சிறைத்தண்டனையை விதித்திருந்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையிலேயே, மேல் நீதிமன்றம் இன்று கீழ் நீதிமன்றத்தின் தண்டனையை முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளது.