Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

சர்வதேச சந்தை மாற்றங்களால் இலங்கையில் குறையப்போகும் எரிபொருள் விலை

Posted on June 27, 2026 by Admin | 143 Views

உலகளாவிய சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து சரிந்து வருவதால், அதன் பலனை மக்களுக்கு நேரடியாகக் கடத்தி நுகர்வோருக்குப் பெரும் நிவாரணத்தை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதுவரையிலான காலப்பகுதியில் அரசாங்கம் சுமார் 57 பில்லியன் ரூபாய் மதிப்பிலான எரிபொருள் மானியத்தை மக்களுக்கு வழங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், இந்த மானியத் திட்டம் நடப்பு மாதத்துடன் நிறைவடைய உள்ளதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்கள் மீது தேவையற்ற நிதிச் சுமையைச் சுமத்தும் நோக்கம் தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என உறுதியளித்த பிரதி அமைச்சர், இந்த மானிய திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து கொள்கை ரீதியிலான முறையான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தினார்.

அண்மைக் காலத்தில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர்ப் பதற்றம் மற்றும் மோதல்கள் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. இதன் தாக்கத்தினால் உள்நாட்டு சந்தையிலும் எரிபொருள் விலைகளைச் சிறிதளவு உயர்த்த வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டது என்று அமைச்சர் விவரித்தார்.

தற்போது சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் மீண்டும் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. இதனால் உலக சந்தையில் குறைந்த விலைக்குக் கொள்வனவு செய்யப்படும் புதிய எரிபொருள் இருப்புக்கள் இலங்கையை வந்தடைந்தவுடன் அதன் முழுமையான நன்மைகளும் நுகர்வோரைச் சென்றடையும் என பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.