(அட்டாளைச்சேனை செய்தியாளர்-சிமாம்)
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஆசிம் முஹம்மது ஆசாத் இலங்கை நூலக சங்கத்தின் உயரிய அங்கீகாரமான ‘பட்டயல் நூலகர்’ (Chartered Librarian) தகைமையைப் பெற்று, அட்டாளைச்சேனை பிரதேசத்தின் முதலாவது பட்டயல் நூலகராக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இலங்கை நூலக சங்கத்தின் 66ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் பட்டமளிப்பு விழாவும் அண்மையில் (ஜூன் 26) கொழும்பு 08 இல் அமைந்துள்ள மருத்துவ முதுகலை நிறுவனத்தின் (PGIM) கல்வி மைய கேட்போர் கூடத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.
நூலக ஆவணவாக்கல் துறையில் சர்வதேச தரம் வாய்ந்த மிக உயரிய தொழில்முறை தகைமையாகக் கருதப்படும் இந்த ‘பட்டயல் நூலகர்’ அந்தஸ்து, அட்டாளைச்சேனை மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தில் நூலக தகவல் உதவியாளராகப் பணியாற்றி வரும் ஆசிம் முஹம்மது ஆசாத் நூலக மற்றும் தகவல் அறிவியல் துறையில் கொண்டுள்ள அசாத்திய பற்று, தொடர்ச்சியான கல்வி, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலமாகவே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
இவர் தனது கல்விசார் பணிகளுக்கு அப்பால் சமூக சேவை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறைகளிலும் தன்னை அர்ப்பணித்து பிராந்திய மட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கி வரும் ஒரு பன்முக ஆளுமை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் நூலகத் துறையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானோரே இந்த ‘பட்டயல்’ தகைமையைப் பெற்றுள்ள நிலையில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இருந்து முதன்முதலாக இச்சாதனையைப் புரிந்துள்ள ஆசாத் அவர்களுக்கு பல்கலைக்கழக சமூகம், நூலகத் துறைசார் நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.