Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த மஸூர் முஹம்மட் கான் உயர்நீதிமன்ற சட்டத்தரணியானார்

Posted on June 28, 2026 by Admin | 237 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்-சனீட்)

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்ட மஸூர் முஹம்மட் கான் இலங்கை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் கடந்த ஜூன் 26ஆம் திகதி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கல்வி, தலைமைத்துவம், சமூகப் பணி எனப் பல்வேறு துறைகளில் தடம் பதித்து, இன்று சட்டத்துறையிலும் தடம் பதித்துள்ள இவரது இந்த சாதனை அவரது குடும்பத்திற்கும், அட்டாளைச்சேனை மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

அட்டாளைச்சேனை அல்-ஜன்னா பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்த அவர் பின்னர் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தார். அதனைத் தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டு கண்டி தஸ்கர அல்-ஹக்கானிய்யா அரபுக் கல்லூரியில் இணைந்து மார்க்கக் கல்வியையும், பின்னர் பாணந்துறை ஜாமிஆ இப்னு உமர் இஸ்லாமிய உயர்கற்கை பிரிவில் பிக்ஹ் சிறப்பு கற்கையையும் பூர்த்தி செய்தார்.

அறிவின் மீதான அவரது தேடல் இத்துடன் நின்றுவிடவில்லை. 2021 ஆம் ஆண்டு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ தகவல் தொழில்நுட்ப இளமானிப் பட்டப்படிப்பை (B.Sc in MIT) ஆரம்பித்த அதேவேளை, இலங்கை சட்டக்கல்லூரி பொதுநுழைவுப் பரீட்சையிலும் தோற்றி அதிவிசேட சித்தியைப் பெற்று சட்டக்கல்லூரிக்குள் நுழைந்தார்.

சட்டக்கல்லூரி வரலாற்றில் ஒரு சிறந்த மாணவராகத் திகழ்ந்த மஸூர் முஹம்மட் கான், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலங்களில் நடைபெற்ற பேச்சுப்போட்டிகள், விவாதப் போட்டிகள், வழக்காடு மன்றப் போட்டிகள் (Moot Competition) எனப் பல போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களையும் பாராட்டுகளையும் குவித்தார். கல்விக்கு அப்பாற்பட்டு, சிறந்ததொரு மாணவர் தலைவராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அவர், சட்ட மாணவர் முஸ்லிம் மஜ்லிஸ், சட்ட மாணவர் தமிழ் மன்றம், சட்ட மாணவர் பௌத்த சகோதரத்துவம் உள்ளிட்ட பல மாணவர் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்து, இன-மத நல்லிணக்கத்திற்காகவும் மாணவர் நலனுக்காகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.

விடாமுயற்சியையும் கடின உழைப்பையும் மூலதனமாகக் கொண்டு இளம் வயதிலேயே பன்முக ஆளுமையாக மிளிரும் சட்டத்தரணி மஸூர் முஹம்மட் கான் எதிர்காலத்தில் நீதியை நிலைநாட்டும் நேர்மையான சட்ட வல்லுநராகவும், சமூக முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்வார் எனப் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.