(திருக்கோவில் செய்தியாளர் – ரமணி)
470 கிலோமீட்டர் தாரிடப்பட்ட பாதைகளிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் ராஜாவாக வலம் வந்த சுப்பிரமணியின் பாதங்கள் கடைசியில் அடர்ந்த காட்டின் வாசலிலேயே அநாதையாய் நிறுத்தப்பட்டுவிட்டன.
கதிர்காம முருகனை நோக்கி பக்திப் பெருக்கோடு ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களின் இதயங்களையும் வென்று “சுப்பிரமணி” என்ற பெயரோடு வலம் வந்த அந்த வாயில்லா ஜீவனுக்கு உகந்தை காட்டுப்பாதைக்குள் நுழையக் கடுமையான தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
வனவிலங்குகளின் கோரப்பிடியிலிருந்து இந்த வாயில்லா ஜீவனைக் காக்கவே இந்தத் தடை என வனஜீவராசிகள் திணைக்களம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அண்மையில் பாணமை–உகந்தை காட்டுப்பகுதியில் பசியோடு அலைந்த சிறுத்தையின் கொடூரத் தாக்குதலுக்கு இரண்டு மனித உயிர்களும், இரண்டு வளர்ப்புப் பிராணிகளும் இரையாகிப் போன அந்த கோர சம்பவமே இந்தத் தடைக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி காட்டுப்பாதை திறக்கப்பட்டதும் சுப்பிரமணியை ஒரு வாகனத்தில் ஏற்றி கதிர்காமத்திற்கு அருகிலுள்ள பிள்ளையாரடி வரை கொண்டு சென்று அங்கிருக்கும் பாதயாத்திரைக் குழுவிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளனர்.
தன் கூட்டத்தோடு காட்டின் அமைதியில் நடந்து செல்லக் காத்திருந்த சுப்பிரமணிக்கு பாதுகாப்பு விதிகளுக்குள் சிக்கி காட்டின் எல்லையிலேயே சிறைப்பட்டு நிற்கிறது.