(அக்கரைப்பற்று செய்தியாளர் – அன்ஸப்)
அக்கரைப்பற்று பிரதேச சபையின் தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய உறுப்பினராக பிரபல சமூக செயற்பாட்டாளர் எம்.எச்.சுபைதா உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா முன்னிலையில் இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராகவும், உறுப்பினராகவும் பதவி வகித்து வந்த ஏ.எம்.எம். ராசிக் கடந்த வெள்ளிக்கிழமை தனது பதவிகளை திடீரென இராஜினாமாச் செய்திருந்தார். அவரின் இந்த அதிரடி இராஜினாமாவைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே கட்சியின் மேலிடத்தினால் தற்போது எம்.எச்.சுபைதா நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள எம்.எச்.சுபைதா நீண்டகாலமாக அரச சார்பற்ற நிறுவனங்களில் இணைந்து அடிமட்ட மக்களின் தேவைகளை அறிந்து பணியாற்றிய ஒரு சிறந்த பெண் ஆளுமையாவார். குறிப்பாக வறிய மற்றும் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கு பல்வேறு வாழ்வாதார உதவிகள், கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பங்களிப்பு அவசியம் எனப் பரவலாக வலியுறுத்தப்பட்டு வரும் தற்போதைய சூழலில் சுபைதாவின் இந் நியமனம் அக்கரைப்பற்று பிரதேச மக்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒரு திறமையான சமூகப் பணியாளராக நீண்டகாலம் களத்தில் நின்று உழைத்த இவர் தற்போது மக்கள் பிரதிநிதியாக சபை அமர்வுகளுக்குள் நுழைவதன் மூலம் அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இன்னும் விரைவாகவும் ஆக்கப்பூர்வமாகவும் தீர்வுகளைப் பெற்றுத்தர முடியும் என அப்பகுதி மக்கள் பலத்த நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தேசிய காங்கிரஸ் தலைவரின் கரங்களால் நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட எம்.எச்.சுபைதாவிற்கு கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.