Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ‘பாடசாலையும் சமூகமும்’ செயற்திட்டம் ஆரம்பம்

Posted on July 7, 2026 by Admin | 130 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்-எம்.ஜே.எம்.சஜீத்)

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு (2024–2026) ஆசிரியப் பயிலுநர்களின் ‘பாடசாலையும் சமூகமும்’ எனும் இரண்டு நாள் செயற்திட்டம் இன்று (07) செவ்வாய்க்கிழமை மிகவும் கோலாகலமாக ஆரம்பமானது.

நாளை வரை தொடரும் இச்செயற்திட்டம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எம்.சி. ஜுனைட் தலைமையில், நிதி மற்றும் நிர்வாகத்திற்குப் பொறுப்பான உப பீடாதிபதி எம்.டி. முஸம்மில் அவர்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக அட்டாளைச்சேனை அல்-முனீரா பெண்கள் உயர்தரப் பாடசாலை மற்றும் அதன் ஆரம்பப் பாடசாலைகளில் ஆசிரியப் பயிலுநர்கள் பல்வேறு சமூக, கல்வி மேம்பாட்டுச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். நிதி மற்றும் நிர்வாக இணைப்பாளர் ஏ. முஹம்மட் நியாஸின் ஒருங்கிணைப்பிலும் பாடசாலைப் பொறுப்பு விரிவுரையாளர்களான எம்.ஐ.எம்.ஏ. ஹூசைன், ஏ.ஏ.ஏ. லதீப் ஆகியோரின் வழிநடத்தலிலும் இப்பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

பாடசாலைச் சூழலைக் கற்றல், கற்பித்தலுக்கேற்ற வகையில் மாற்றி சமூக ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதே இச்செயற்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்கமைய ஆசிரியப் பயிலுநர்கள் குழுக்களாகப் பிரிந்து பாடசாலை வளாகத்தைச் சுத்திகரித்து அழகுபடுத்துதல், வகுப்பறைகளை அலங்கரித்தல், மாணவர்களின் தளபாடங்களைப் பழுதுபார்த்தல், சுவர்களில் கவனத்தைக் கவரும் ஓவியங்களை வரைதல் மற்றும் கற்றல் வளங்களை உருவாக்குதல் போன்ற பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

இவ் ஆரம்ப நிகழ்வில் அல்-முனீரா பாடசாலையின் அதிபர் ஏ.எல். யாசீன், பிரதி அதிபர் ஏ.எம். அஸ்மி, ஆரம்பப் பாடசாலைப் பொறுப்பாசிரியர் ஏ.எஸ். றுமையிஸ், ஏ.ஜே. சமூர், கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு பயிலுநர்களுக்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கினர்.

இச்செயற்திட்டமானது எதிர்கால ஆசிரியர்களின் சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பதுடன், பாடசாலைக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவை மேலும் பலப்படுத்தும் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளதாகப் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.