(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை பகுதியில் நீண்டகாலத் தேவையாகவுள்ள மேம்பாலத்தை அமைப்பதற்கான முதற்கட்ட நகர்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விபரங்கள் அடங்கிய ஆவணங்களை, அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரிடம் கையளித்தார்.
போபோக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் அண்மையில் (7ஆம் திகதி) நடைபெற்ற போதே பாராளுமன்ற உறுப்பினரால் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன் அதற்கான ஆவணங்களும் கையளிக்கப்பட்டன.
இதன்போது சபையில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி, அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, தேசிய பாடசாலை மற்றும் கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி ஆகிய முக்கிய கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் அடிக்கடி பாரிய விபத்துகள் ஏற்பட்டு தொடர்ச்சியாக மரணங்கள் சம்பவித்து வருவதை சுட்டிக்காட்டினார்.
மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, இப்பிரதேசத்தில் மேம்பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக ஏற்கனவே வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மதிப்பீட்டு அறிக்கையும் வரைபடங்களும் தயாரிக்கப்பட்டிருந்தன. எனினும், பல்வேறு காரணங்களால் இந்த வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது. எனவே, மக்களின் மிக முக்கியமான தேவையாகக் கருதப்படும் இந்த மேம்பால நிர்மாணப் பணிகளை உடனடியாக மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் அமைச்சரிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
தேசிய வீதியில் பல நிறுவனங்கள் அமைந்துள்ள அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இடைநிறுத்தப்பட்ட மேம்பாலம் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என்றும் இப்பிரதேச மக்களின் மிக முக்கியமான தேவையாக உள்ள மேம்பாலம் நிர்மாணிக்கும் பணியை உடனடியாக ஆரம்பிக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள அட்டாளைச்சேனைப் பகுதியில் மேம்பாலம் அமைப்பது குறித்த விரிவான தகவல்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரிடம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையை கையளிக்குமாறும், இத்திட்டம் தொடர்பாக முறையான களஆய்வை மேற்கொண்டு விரிவான அறிக்கை ஒன்றை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்கு அமைச்சர் இதன்போது பணிப்புரை வழங்கினார்.