Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

அட்டாளைச்சேனையில் டெங்கு பரவலை தடுக்க தவிசாளர் உவைஸ் தலைமையில் விசேட நடவடிக்கை

Posted on July 13, 2026 by Admin | 133 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்- ஹபீஸ்)

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நோக்கில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் தலைமையில் விசேட முன்னேற்பாட்டுக் கூட்டமொன்று பிரதேச சபை கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், தீகவாபி மற்றும் திராய்க்கேணி ஆகிய பிரதேசங்களில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்புச் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பொது வைத்திய அதிகாரி டாக்டர் அலாவுதீன், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குள் டெங்கு ஒழிப்புச் செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதற்காக தவிசாளரின் வழிகாட்டலின் கீழ் 31 துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய விசேட குழுவொன்று உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டது.

மேலும் டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பல முக்கிய தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. அதன்படி சகல தரப்பினரதும் ஒத்துழைப்புடன் அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, தீகவாபி பிரதேச மக்களுக்கான பாரிய டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதென முடிவு செய்யப்பட்டது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஆகியவற்றை ஒன்றிணைத்து வெள்ளிக்கிழமை ஜும்ஆ பிரசங்கங்களில் டெங்கு விழிப்புணர்வு தொடர்பான குத்பா உரைகளை நிகழ்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், அரசியல் பேதங்களை முற்றாக மறந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட 11 வட்டாரங்களிலும் டெங்கு ஒழிப்புச் செயற்பாடுகளைக் கண்காணித்து முன்னெடுக்கும் பொறுப்பை அந்தந்த வட்டாரப் பிரதேச சபை உறுப்பினர்களிடம் கையளித்து அவர்களைத் தலைவர்களாகச் செயற்பட வைப்பதற்கும் இணக்கம் காணப்பட்டதுடன் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் அமைப்பினால் கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள டெங்கு ஒழிப்புச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.