(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
முன்பள்ளித்துறைக்காக தேசிய ரீதியில் ஒரே விதமான கொள்கைகளையும் பாடவிதானங்களையும் உருவாக்குவதற்கு தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் தமக்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
பாராளுமன்றக் கட்டிடத்தில் அமைச்சர் திருமதி சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற சிறுவர், மகளிர் அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை மேலும் தெரிவிக்கையில்;
“வளர்ச்சியடைந்த நாடுகளில் முன்பள்ளிக் கட்டமைப்புகள் ஆரம்பம் முதலே மிகச் சிறந்த முறையில் இயங்கி வருகின்றன. ஆனால், எமது நாட்டில் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் 9 மாகாணங்களிலும் வெவ்வேறு விதமான கொள்கைகளும், பாடவிதானங்களுமே நடைமுறையில் உள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து தேசிய மட்டத்திலான ஒரே கொள்கையையும் பாடவிதானத்தையும் அமுல்படுத்துமாறு நீண்டகாலமாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.
முன்னதாக கௌரவ பிரதமர் தலைமையில் நடைபெற்ற கல்வி, உயர் கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்திலும் இவ்விடயங்களை நான் வலியுறுத்தியிருந்தேன். இன்று கல்வி மற்றும் சிறுவர், மகளிர் அபிவிருத்தி அமைச்சுக்கள் ஒன்றிணைந்து தேசிய மட்டத்தில் ஒரே விதமான பாடவிதானத்தை நடைமுறைப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவது பாராட்டுக்குரியது.
நான் கிழக்கு மாகாண முன்பள்ளிப் பாடசாலைகள் பணியகத்தின் தவிசாளராகப் பதவி வகித்தவன் என்ற அடிப்படையில் சில முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். கிழக்கு மாகாணத்தில் தற்போது 1,845 முன்பள்ளிகள் இயங்கி வருவதுடன், அங்கு 52,179 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இங்கு சேவையாற்றும் 3,926 ஆசிரியர்களில் 2,801 பேர் மாத்திரமே டிப்ளோமா பயிற்சிகளைப் பெற்றுள்ளனர். எஞ்சிய 1,125 ஆசிரியர்களுக்கு இதுவரை டிப்ளோமா பயிற்சி வழங்கப்படவில்லை. எனவே, இவர்களுக்கான விசேட பயிற்சி நெறிகளை அமைச்சு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் 90 சதவீதமான முன்பள்ளிகள் தனியார் கட்டிடங்களிலேயே இயங்கி வருகின்றன. இதனால் அரச நிதியைப் பயன்படுத்தி அவற்றுக்கான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியாத சட்டச் சிக்கல் காணப்படுகிறது.
இதற்குத் தீர்வாக தனியார் கட்டிடங்களில் இயங்கும் முன்பள்ளிகளை அருகிலுள்ள அரச பாடசாலைகளுடன் இணைத்து நடத்தும் செயற்றிட்டங்களை அமைச்சு முன்னெடுக்க வேண்டும். இதன் மூலம், அரச பாடசாலைகளின் கண்காணிப்பின் கீழ் முன்பள்ளிகளைக் கொண்டுவர முடிவதுடன், பாடசாலை சமூகத்தின் முழுமையான ஒத்துழைப்பையும் வளங்களையும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு உருவாகும்.
எனவே, முன்பள்ளித்துறையின் மேம்பாட்டிற்காக மாகாண முன்பள்ளிப் பணியகம், கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் வலயக் கல்வி அலுவலகங்கள் என்பன ஒன்றிணைந்து செயற்படுவதற்கான பொறிமுறையொன்றை அமைச்சு உருவாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பையின் கருத்துக்களுக்குப் பதிலளித்த சிறுவர், மகளிர் அபிவிருத்தி பிரதி அமைச்சர், “முன்பள்ளித்துறை சார்ந்து பல புதிய திட்டங்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருவதால் உங்களது இந்த ஆக்கபூர்வமான முன்மொழிவுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.