ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களது பாலினத்தை மாற்றிக்கொள்வதற்கு அனுமதி வழங்கி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளை வலுவிழக்கச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற மாற்றுத்திறனாளி ‘வொரண்ட்’ அதிகாரியான (Warrant Officer) சாந்த ஜயதிலக என்பவரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்டோர் பெயரிடப்பட்டிருந்தனர்.
எனினும், குறித்த மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் அதனை மேலதிக விசாரணைக்கு உட்படுத்தத் தேவையில்லை எனத் தீர்மானித்து மனுவை முற்றாக நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.