Top News
| அட்டாளைச்சேனை நாவலடி வீதியில் மரணப் பொறியாக மாறியுள்ள வடிகான்- கண்டும் காணாமல் இருக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபை | | பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை உருவாக்கிய அட்டாளைச்சேனை இளைஞனுக்கு அமெரிக்காவில் சர்வதேச அங்கீகாரம் | | பதிவாளர் தரம் II போட்டிப் பரீட்சையில் அட்டாளைச்சேனையை சேர்ந்த பைறூஸ் தெரிவு |
Aug 16, 2026

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முபாரக் ஹஸ்னா பானு இலங்கை சட்டக் கல்லூரி இறுதி ஆண்டு பரீட்சையில் முதல் வகுப்பில் சித்தி

Posted on July 28, 2026 by Admin | 213 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்- அஹ்மத்)

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முபாரக் ஹஸ்னா பானு அவர்கள், 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை சட்டக் கல்லூரி இறுதி ஆண்டு சட்டத்தரணி பரீட்சையில் ஆங்கில மொழிமூலத்தில் முதல் முயற்சியிலேயே முதல் வகுப்பில் (First Class) சித்தியடைந்து, 70.88 என்ற சிறப்பான சராசரி பெறுபேற்றைப் பெற்று குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளார்.

தனது கல்விப் பயணத்தில் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் பயணித்த அவர், இவ்வெற்றியின் மூலம் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கும், தனது குடும்பத்தினருக்கும், கல்விச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

முபாரக் ஹஸ்னா பானு அவர்கள் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் (தரம் 1 முதல் 13 வரை) கற்றார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்று, அம்பாறை மாவட்டத்தில் 25ஆம் இடத்தையும் பெற்றார்.

கல்வியுடன் மார்க்க அறிவிலும் சிறந்து விளங்கிய அவர், 2013 ஆம் ஆண்டு “மத்ரஸத்துல் ஆதிகா” நிறுவனத்தில் ஹாபிழா கற்கையை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

தொடர்ந்து உயர் கல்வியில் முன்னேறிய அவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் LL.B. (Hons) சட்டப் பட்டப்படிப்பைத் தொடர்ந்ததுடன், Second Class பெறுபேற்றுடன் பட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை மேற்கொண்ட அவர், 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி ஆண்டு சட்டத்தரணி பரீட்சையில் ஆங்கில மொழிமூலத்தில் முதல் முயற்சியிலேயே முதல் வகுப்பில் சித்தியடைந்துள்ளார்.

வாழ்க்கைப் பயணத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், குறிப்பாக தனது தந்தையின் இழப்பிற்குப் பின்னரும் மன உறுதியையும் விடாமுயற்சியையும் இழக்காமல் கல்விப் பயணத்தைத் தொடர்ந்த அவர் பெற்றுள்ள இவ்வெற்றி, பல இளைஞர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது.

ஒழுக்கம், அர்ப்பணிப்பு, மார்க்கப் பற்றுதல் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை தனது வெற்றியின் அடித்தளமாகக் கொண்டுள்ள முபாரக் ஹஸ்னா பானு அவர்கள், எதிர்காலத்தில் நீதியை நிலைநாட்டும் சிறந்த சட்டத்தரணியாகவும், சமூகத்திற்கு பயனுள்ள சேவைகளை வழங்கும் ஆளுமையாகவும் திகழ வாழ்த்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கை சட்டக் கல்லூரி இறுதி ஆண்டு பரீட்சையில் முதல் வகுப்பில் சித்தியடைந்த முபாரக் ஹஸ்னா பானு அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.