(மருதமுனை செய்தியாளர்)
மருதமுனையைச் சேர்ந்த மாணவி றக்சானா சட்டத்தரணிகளுக்கான (Attorney-at-Law) இறுதித் தேர்வில் முதல் வகுப்பில் (First Class) சித்தியடைந்து தனது சொந்த ஊருக்கும் குடும்பத்திற்கும் மாபெரும் பெருமையைத் தேடித் தந்துள்ளார்.
மருதமுனையைச் சேர்ந்த நாசீர் (நாசீர் ஹோட்டல்) மற்றும் ஸாறா உம்மா தம்பதியினரின் மூன்றாவது புதல்வியான இவர், ஆங்கில மொழி மூலமாகச் சட்டத்துறையில் பயின்று இந்தச் சாதனையை நிலைநாட்டியுள்ளார். குறித்த இறுதித் தேர்வில் 71.38 சதவீத சராசரிப் பெறுபேற்றைப் பெற்று, முதல் வகுப்பில் அவர் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இவ்வருடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தனது சட்டமாணி (LL.B.) பட்டத்தினையும் றக்சானா வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளார். இது அவரது கல்விப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
சாதாரண தேநீர் கடை வியாபாரியாக அன்றாடம் உழைத்து வாழ்க்கையை நடத்தும் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, இவ்வாறானதொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்தமை அனைவர் மத்தியிலும் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பல மெளனப் போராட்டங்கள், பொருளாதாரச் சவால்கள் மற்றும் பாரிய அர்ப்பணிப்புகளுக்கு மத்தியிலேயே இந்த உயரிய வெற்றியை அவர் தனதாக்கியுள்ளார்.
கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பலனாகக் கிடைத்துள்ள இந்த வெற்றி, சட்டத் துறையில் அவர் மென்மேலும் பல உயரங்களை அடைவதற்கான உறுதியான அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சட்டத் துறையில் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றி, சமூக நீதியை நிலைநாட்டும் உயரிய பணியில் சிறந்து விளங்கச் சாதனைப் புதல்வி றக்சானாவுக்குப் பிரதேச மக்கள், புத்திஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.