Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

மாகாண பாடசாலைகளுக்கும் ரூபா 25,000 மின்சாரக் கொடுப்பனவு வழங்கக் கோரி பாராளுமன்றில் உதுமாலெப்பை எம்பி நாளை கேள்வி

Posted on August 6, 2026 by Admin | 142 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான மாதாந்த மின்சாரக் கட்டண ஒதுக்கீட்டில் காணப்படும் பாரிய ஏற்றத்தாழ்வை நீக்கி மாகாணப் பாடசாலைகளுக்கான கொடுப்பனவையும் தேசியப் பாடசாலைகளுக்கு நிகராக அதிகரிக்குமாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை நாளை (07.08.2024) பாராளுமன்றத்தில் பிரதமர் மற்றும் கல்வி, உயர் கல்வி, தொழிற் கல்வி அமைச்சரிடம் வினவப்படவுள்ள ஒத்திவைப்பு பிரேரணையில் கேள்வியாக கேட்கவுள்ளார்.

கொடுப்பனவுகளில் காணப்படும் பாரிய இடைவெளி
நமது நாட்டில் உள்ள தேசியப் பாடசாலைகளின் மாதாந்த மின்சாரக் கட்டணமாக 12,000 ரூபா கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ‘ED/01/06/18/மின்சாரம்/2024’ எனும் சுற்றுநிருபத்தின் பிரகாரம், தேசியப் பாடசாலைகள் அனைத்திற்கும் மாதாந்த மின்சாரக் கட்டணக் கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும், கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மாகாணப் பாடசாலைகளுக்கு 01-03-2011 அன்று வெளியிடப்பட்ட ‘EP/20/01/2011’ ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் அடிப்படையிலேயே இன்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி மாதாந்தம்:
1AB பாடசாலைகளுக்கு: ரூபா 1,500
1C பாடசாலைகளுக்கு: ரூபா 1,200
Type II பாடசாலைகளுக்கு: ரூபா 800
Type III பாடசாலைகளுக்கு: ரூபா 400
எனும் அடிப்படையில் மாத்திரமே நிதி வழங்கப்படுகின்றது.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் மின்சாரக் கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில், மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்படும் இந்தத் தொகை எவ்விதத்திலும் போதுமானதாக இல்லை. இதனால் மாகாணப் பாடசாலை அதிபர்களும், பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

ஒரே நாட்டில் மத்திய கல்வி அமைச்சினால் நிர்வகிக்கப்படும் பாடசாலைகளுக்கு 25,000 ரூபாவும், மாகாண சபைகளால் நிர்வகிக்கப்படும் முன்னணி (1AB) பாடசாலைகளுக்குக் கூட வெறும் 1,500 ரூபாவும் வழங்கப்படுவது கல்விக்கான சமவாய்ப்பில் காணப்படும் அப்பட்டமான சமத்துவமின்மையாகும்.

எனவே, மத்திய அரசாங்கப் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் அதே தொகையினை மாகாணப் பாடசாலைகளுக்கும் வழங்குவதற்கு கௌரவ பிரதமர் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என வலியுறுத்தவுள்ளார்.