Top News
| பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை உருவாக்கிய அட்டாளைச்சேனை இளைஞனுக்கு அமெரிக்காவில் சர்வதேச அங்கீகாரம் | | பதிவாளர் தரம் II போட்டிப் பரீட்சையில் அட்டாளைச்சேனையை சேர்ந்த பைறூஸ் தெரிவு | | இன நல்லுறவில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் நிர்வாகத்தினர் தீ மூட்ட வேண்டாம் |
Aug 16, 2026

மாத்தறை – பொத்துவில் அதிவேக வீதி மற்றும் அருகம்பேக்கு புதிய மின்மாற்றி: அமைச்சர் விஜித ஹேரத்திடம் எம்.பி. உதுமாலெப்பை கோரிக்கை

Posted on August 6, 2026 by Admin | 129 Views

அருகம்பே பிரதேச சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையான அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கும், அருகம்பே பகுதி ஹோட்டல்களின் தேவை கருதி புதிய மின்மாற்றியொன்றை (Transformer) பொருத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை துரிதமாக எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் அருகம்பே சுற்றுலாத்துறையில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று அண்மையில் பொத்துவில் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பொத்துவில் பிரதேச செயலாளர் ஏ.சி. நசீலின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“அருகம்பே பிரதேச சுற்றுலாத்துறை தொடர்பான இந்த விசேட கூட்டத்தை ஏற்பாடு செய்து இங்கு வருகை தந்துள்ள அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோருக்கு பிரதேச மக்கள் சார்பில் முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அருகம்பே பிரதேசத்திற்கு வருகை தரும் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளினதும், அம்பாறை மாவட்ட மக்களினதும் இலகுவான போக்குவரத்து நன்மை கருதி மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையான அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைவது மட்டுமன்றி, அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும், வெளிநாடுகளில் வசிக்கும் இம்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பெரும் நன்மையடையும் நிலை உருவாகும். எனவே, சுற்றுலாத்துறை அமைச்சர் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அருகம்பே பிரதேசத்தில் உள்ள பல ஹோட்டல்கள் நீண்டகாலமாக முப்பிரிவு (3 Phase) மின்னிணைப்பு இன்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன. எனவே, மின்வலு அமைச்சருடன் தொடர்புகொண்டு அருகம்பே பகுதிக்குத் தேவையான புதிய மின்மாற்றியைப் (Transformer) பொருத்துவதற்கான ஏற்பாடுகளையும் அமைச்சர் பெற்றுத்தர வேண்டும்” என வலியுறுத்தினார்.

இக்கோரிக்கைகள் தொடர்பில் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையினால் சுட்டிக்காட்டப்பட்ட மாத்தறையிலிருந்து அருகம்பே வரையான அதிவேக வீதி அமைக்கும் வேலைத்திட்டமானது அரசாங்கத்தின் ‘ஐ-ரோட்’ (i-Road) திட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதேவேளை, அருகம்பே பிரதேசத்துக்கான மின்மாற்றி மற்றும் மின்னிணைப்புப் பிரச்சினைகள் தொடர்பில் தான் நேரடியாக மின்சக்தி அமைச்சுடன் தொடர்புகொண்டு துரித ஏற்பாடுகளை மேற்கொள்வதாக அமைச்சர் விஜித ஹேரத் அங்கு உறுதியளித்தார்.