Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் மாணவிகளின் தலை முக்காடை அகற்ற முயன்ற பரீட்சை மேற்பார்வையாளர்

Posted on August 14, 2026 by Admin | 267 Views

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி பரீட்சை மண்டபத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் இன்று (14) தோற்றிய முஸ்லிம் மாணவிகளின் ஆடைச் சுதந்திரம் மீறப்பட்டமை தொடர்பில் கல்வி அமைச்சராகவும் செயற்படும் பிரதமரின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டுவரப்பட்டுள்ளதாக சமூக நீதிக் கட்சியின் பிரதித் தலைவர் ரிஸானா ஷிமாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சமூக நீதிக் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி பரீட்சை மண்டபத்தில் க.பொ.த உயர்தர பௌதீகவியல் வினாத்தாள் பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகளின் கலாசார ஆடைகளை பலவந்தமாக அகற்றுவதற்கு ஆண் மேற்பார்வையாளர் ஒருவர் முயற்சித்துள்ளார். இதனால் குறித்த மாணவிகள் பெரும் மன உளைச்சலுக்கும் பதற்றத்திற்கும் உள்ளாகியுள்ளனர். முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமொன்றில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தை ஒரு சாதாரண விடயமாகக் கடந்து செல்ல முடியாது.

பரீட்சை மண்டபத்தினுள் பரீட்சார்த்திகளின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக முகத்தையும் காதுகளையும் மாத்திரம் திறந்த நிலையில் வைத்திருப்பது போதுமானது எனப் பரீட்சைகள் திணைக்களத்தினால் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறான நிலையிலும் இவ்வாறான அசம்பாவிதங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அத்துடன், இது அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) உறுதிப்படுத்தியுள்ள அடிப்படை உரிமையான ‘சமவாய்ப்பை’ மீறும் செயலாகும்.

இலங்கையில் காலகாலமாகப் பெண்களின் ஆடைச் சுதந்திரம் தொடர்ச்சியாக மீறப்பட்டு வருவதை நாம் காண்கிறோம். அண்மையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையிலும் 9 பெண் சுகாதார உதவியாளர்களின் ஆடைச் சுதந்திரம் மீறப்பட்டிருந்தது. இவ்வாறான சம்பவங்களால் ஏற்படும் உளவியல் நெருக்கடிகள், மாணவிகளின் பரீட்சைப் பெறுபேறுகளிலும் அவர்களின் பல்கலைக்கழக நுழைவிலும் பாரிய தாக்கத்தைச் செலுத்தும். இதற்கு உரிய அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறாக ஆடைச் சுதந்திரம் மீறப்படுவதைத் தடுப்பதற்கும், கண்காணிப்பதற்கும் இலங்கையில் முறையான கண்காணிப்புப் பொறிமுறையொன்று (Monitoring Mechanism) இல்லை என்பதே இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதற்குக் பிரதான காரணமாகும்.

எனவே, அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுசெல்வதுடன், எதிர்காலத்தில் ஆடைச் சுதந்திரம் மீறப்படுவதைக் கண்காணிக்கவும், இவ்வாறான உளவியல் ரீதியான வன்முறைகளைத் தடுப்பதற்கும் பொருத்தமான கண்காணிப்புப் பொறிமுறையொன்றை (Monitoring Body) உடனடியாக ஏற்படுத்துமாறும் அரசாங்கத்தைக் கோருகிறோம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.