Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

அட்டாளைச்சேனை நாவலடி வீதியில் மரணப் பொறியாக மாறியுள்ள வடிகான்- கண்டும் காணாமல் இருக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபை

Posted on August 16, 2026 by Admin | 167 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்- முஹம்மட்)

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் முக்கிய வீதியொன்றின் வடிகான் மூடிகள் சேதமடைந்து பல நாட்களாகியும் உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதிருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அட்டாளைச்சேனை நாவலடி வீதியையும் (அலிஸா அழகுக்கலை நிலையத்திற்கு அருகாமையில்) அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியையும் இணைக்கும் பகுதியிலேயே இந்த அபாயகரமான நிலை காணப்படுகிறது. குறித்த வடிகானுக்கு மேலாக இடப்பட்டிருந்த கொங்கிறீட் மூடிகள் முற்றாக உடைந்து, பாரிய துவாரங்களுடன் நீண்ட நாட்களாக திறந்த நிலையில் காட்சியளிக்கின்றன.

இந்த வீதியானது பாதசாரிகளுக்கும், பாடசாலை மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் உள்ளூர் பயணிகளுக்கும் மிகவும் அவசியமான ஒரு போக்குவரத்து மையமாகும். வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு (RDA) சொந்தமான மற்றும் பராமரிப்புக்கு பொறுப்பான இந்தப் பகுதியை அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் பல நாட்களாகக் கண்டும் காணாமல் இருப்பது அவர்களின் நிர்வாக மெத்தனத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

குறிப்பாக இரவுக் நேரங்களிலும், மழைக் காலங்களிலும் வீதியில் நீர் தேங்கும் போது சேதமடைந்த வடிகான் பகுதியைக் கடந்து செல்வது உயிராபத்தை விளைவிக்கக் கூடியதாகும். திறந்த நிலையில் உள்ள இந்த ஆழமான வடிகாணுக்குள் சிறுவர்கள், முதியவர்கள் அல்லது இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழும் பட்சத்தில் பாரிய உயிர்ச் சேதங்கள் நிகழக்கூடும் மற்றும் வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டு வருகின்றது.

ஒரு பாரிய அசம்பாவிதம் நிகழ்ந்து, உயிர்கள் பலியான பின்னர்தான் அதிகாரிகள் விழித்துக்கொள்வார்களா? என்ற நியாயமான கேள்வியைப் பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.

எனவே, உரிய பொறுப்புவாய்ந்த அதிகார சபையானது உடனடியாகக் களத்திற்குச் சென்று பார்வையிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சேதமடைந்த வடிகான் மூடிகளை அகற்றிவிட்டு புதிய மற்றும் உறுதியான மூடிகளைப் பொருத்துவதற்குத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட மற்றும் மாகாண நிர்வாகத் தரப்புகள் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமாக வலியுறுத்துகின்றனர்.