Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

கல்முனை ஆதார வைத்தியசாலை சீருடை விவகாரம்: 9 பெண்களும் இடமாற்றம்

Posted on August 18, 2026 by Admin | 148 Views

(கல்முனை செய்தியாளர்)

அம்பாறை மாவட்டம், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த சுகாதார உதவியாளர்களின் சீருடை விவகாரத்திற்கு சுகாதார அமைச்சினால் தீர்வு காணப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட 9 முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

“கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு இம்மாதம் 6 ஆம் திகதி 37 புதிய சுகாதார உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் 9 முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்களின் சீருடை பயன்பாடு தொடர்பில் சில இழுபறி நிலைகளும் விவாதங்களும் எழுந்திருந்தன.

இந்நிலையைக் கருத்திற்கொண்டு சுகாதார அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்திற்கு அமைய, அவர்கள் ஒன்பது பேரும் அருகிலுள்ள கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விடுவிக்கப்பட்டு புதிய வைத்தியசாலையில் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர். இதன் மூலம் இப்பிரச்சினை சுமுகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.”

இவ்விடமாற்றம் தொடர்பில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுத் தலைவர் சந்திரசேகரம் ராஜன் கருத்துத் தெரிவிக்கையில், சுகாதார அமைச்சின் இடமாற்ற உத்தரவு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதற்கமைய குறித்த பெண் ஊழியர்கள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் உறுதிப்படுத்தினார்.