அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எம். நிஹால் அவர்களை நியமிப்பதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையில் ஏற்கனவே எட்டப்பட்ட அரசியல் ஒப்பந்தத்திற்கு அமைவாகவே இந்த சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளர் தெரிவு மற்றும் சபையின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை தலைமையில் நேற்று (22) அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காரியாலயத்தில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேசத்தின் அபிவிருத்தியை தடையின்றி முன்னெடுப்பதற்காகவும், மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்காகவும் இரு பிரதான கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை இக்கூட்டத்தில் எம்.எஸ். உதுமாலெப்பை வலியுறுத்தினார்.
எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை புதிய உதவித் தவிசாளர் உத்தியோகபூர்வமாகத் தெரிவு செய்யும் நிகழ்வில் தேசிய காங்கிரஸுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் எம்.எம். நிஹால் அவர்களுக்கு சபையில் முழுமையான ஆதரவை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வழங்குவது என உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக இணக்கம் தெரிவித்தனர்.
இந்த இணக்கப்பாடானது அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிருவாகக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் எனவும், கட்சி பேதங்களைக் கடந்து பிரதேசத்தின் உட்கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்த உதவும் எனவும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிகழ்வில் கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன்(Ex.MMC), அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், முன்னாள் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, முன்னாள் உதவித் தவிசாளர் எப்.நஜீத், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.சி.நியாஸ், ஏ.எல்.பாயிஸ் (ADE), எஸ்.எம். றியாஸ், றியா மசூர், ஐ.எல்.அஸ்வர், எம்.எல்.றினாஸ், பி.எச்.ஜி.டி சில்வா மற்றும் புதிய உதவித் தவிசாளராக தெரிவு செய்யப்படவுள்ள எம்.எம்.நிஹால் ஆகியோர் கலந்து கொண்டனர்.







