Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

இனவாதத்திற்கு இனி இடமில்லை – தேசிய மீலாதுன் நபி விழாவில் ஜனாதிபதி திட்டவட்டம்

Posted on August 26, 2026 by Admin | 139 Views

தேசிய ஒருமைப்பாட்டிற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதுடன், நாட்டில் இனவாதத்திற்கு இனி எவ்விதத்திலும் இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க திட்டவட்டமாக அறிவித்தார்.

நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று (26) பிற்பகல் இடம்பெற்ற 42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச மட்டத்தில் கௌரவத்திற்கும் அங்கீகாரத்திற்கும் பாத்திரமான ஒரு நாடாக இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மேலும், ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உயரிய போதனையை நடைமுறைப்படுத்துவதிலும், அதனை உறுதிப்படுத்துவதிலும் அரசாங்கம் கடந்த காலங்களில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டது என்பதையும் அவர் இங்கு வலியுறுத்தினார்.

நாட்டை வளர்ச்சியடைந்த, சிறந்த அரசாகக் கட்டியெழுப்புவதில் மக்கள் சக்தியின் மீது அரசாங்கம் பலமான நம்பிக்கையைக் கொண்டுள்ளது. பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எவ்வித தீர்மானங்களையும் தற்போதைய அரசாங்கம் எடுக்காது எனவும், அதேவேளை மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் எத்தகைய தீர்மானங்களையும் திரும்பப் பெறப்போவதில்லை எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக, சட்டத்தின் மீது பொதுமக்களுக்கு உள்ள நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துவதும், நீதியை நிலைநாட்டுவதை வினைத்திறனாக்குவதுமே பிரதான எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில், போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றவியல் வலையமைப்புகளை முற்றாக அழித்தொழிக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றும் என உறுதியளித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இந்த தேசியப் பணிக்கு ஒன்றிணையுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் திறந்த அழைப்பு விடுத்தார்.

பல தசாப்தங்களாக பள்ளிவாசல்களில் சமயப் பணிகளை மேற்கொண்டு, தமது வாழ்வின் பெரும்பகுதியை சமூகத்தின் நல்வாழ்விற்காக அர்ப்பணித்த மௌலவிமார்களின் சேவையைப் பாராட்டி கௌரவிப்பதையிட்டு ஜனாதிபதி தனது உரையில் பெருமகிழ்ச்சி வெளியிட்டார்.

இந்தத் தேசிய விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் தனது விசேட நன்றிகளையும் அவர் இதன்போது தெரிவித்தார்.