(அட்டாளைச்சேனை செய்தியாளர்- நுஸைப்)
அண்மையில் வெளியாகிய 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை டாக்டர் ஜலால்தீன் வித்தியாலயம் நூற்றுக்கு நூறு வீத (100%) சித்தியைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இம்முறை இப்பரீட்சைக்கு இப்பாடசாலையிலிருந்து 24 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இந்த 24 மாணவர்களும் 70 இற்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்று 100% சித்தியடைந்து பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். குறிப்பாக இவர்களில் 08 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளமை இப்பாடசாலையின் கல்வித் தரத்தின் மகுடமாக அமைந்துள்ளது.
இந்த மகத்தான வெற்றிக்கு பாடசாலையின் அதிபர் எம்.ஏ.எச். அப்துர் ரஹ்மான் அவர்களின் தூரநோக்குச் சிந்தனையும், சிறந்த வழிகாட்டலுமே அடித்தளமாக அமைந்துள்ளது. அத்துடன் மாணவர்களைத் தமது சொந்தப் பிள்ளைகளாக எண்ணி, இரவு பகலாக அர்ப்பணிப்புடன் பயிற்றுவித்து அவர்களை பரீட்சைக்குத் தயார்படுத்திய தரம் 5 வகுப்புக்குப் பொறுப்பான ஆசிரியர் ஜே.எம். நிம்ஸாத் அவர்களின் அளப்பரிய சேவையும், தியாகமும் இங்கு சிறப்பாகப் போற்றப்பட வேண்டியதாகும்.
ஆசிரியர்களின் கற்பித்தலுக்கு அப்பால் மாணவர்களின் இந்த வெற்றிக்குப் பின்னணியில் பெற்றோர்களின் தொடர்ச்சியான கண்காணிப்பும், தளராத ஒத்துழைப்பும் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளன. அத்துடன், விளையாடும் வயதிலும் தமது இலக்கினை நோக்காகக் கொண்டு, அயராது கற்றலில் ஈடுபட்ட பிஞ்சு மாணவர்களின் விடாமுயற்சியே இன்று இந்த மாபெரும் வெற்றியாக உருவெடுத்துள்ளது.
பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், அர்ப்பணிப்புள்ள ஒரு குழுவாக அதிபர், ஆசிரியர், பெற்றோர்கள் , பாடசாலை நிறைவேற்றுக் குழு, பழைய மாணவர்கள் இணைந்து செயற்பட்டால் எத்தகைய இலக்கையும் அடையலாம் என்பதற்கு அட்டாளைச்சேனை டாக்டர் ஜலால்தீன் வித்தியாலயம் இன்று சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றது.
கல்வித் துறையில் பல சாதனைகளை நோக்கிப் பயணிக்கும் இப்பாடசாலை சமூகம் மென்மேலும் பல வெற்றிகளைக் குவிக்க பலதரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.