Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

15 வருட வரலாற்றை மாற்றிய அறபாவின் மைந்தர்களுக்கான கெளரவிப்பு மழை

Posted on September 7, 2026 by Admin | 180 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்- சஜீத்)

அண்மையில் வெளியான 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் தனது கடந்த 15 வருட கால கல்வி வரலாற்றை மாற்றிமைத்து புதிய சரித்திரமொன்றைப் படைத்துள்ளது.

இம்முறை இப்பாடசாலையிலிருந்து 39 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 38 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இவர்களில் 36 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 95 சதவீத சித்தியைப் பதிவு செய்துள்ளனர்.அம்பாறை மாவட்ட வெட்டுப்புள்ளிகளைத் தாண்டி 08 மாணவர்கள் சித்தியெய்தி பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ளனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு தொடக்கம் 2026 ஆம் ஆண்டு வரையான 15 வருடப் பரீட்சை முடிவுகளின் பகுப்பாய்வுத் தரவுகளின்படி இந்த ஆண்டு பெறப்பட்டுள்ள அடைவுமட்டமானது இப்பாடசாலையின் மிகச் சிறந்த கல்வி வளர்ச்சியாகப் பதியப்பட்டுள்ளதுடன் வலய மட்டத்திலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டிய மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு இன்று (07) பாடசாலையின் அதிபர் எம்.ஐ. அஜ்மீர் தலைமையில் பாடசாலை வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இதன்போது, மாவட்ட வெட்டுப்புள்ளிகளைத் தாண்டி சித்தியெய்திய 08 சாதனை மாணவர்களுக்கும் அதிதிகள் மற்றும் ஆசிரியர்களால் மாலை அணிவிக்கப்பட்டு, பதக்கங்கள் சூட்டிப் பாராட்டப்பட்டதுடன் பரீட்சைக்குத் தோற்றிய ஏனைய மாணவர்களின் கல்வி ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் ஊக்குவிக்கும் நோக்கில் அவர்களுக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமை சமூக மட்டத்தில் அனைவரினதும் பலத்த வரவேற்பைப் பெற்றது.

போட்டித்தன்மை நிறைந்த தற்காலக் கல்விச் சூழலில் மாணவர்களின் இந்த அபரிமித அடைவுக்குப் பாடசாலை அதிபரின் வினைத்திறனான முகாமைத்துவம், தரம் 5 கற்பிக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடனான வழிகாட்டல், மாணவர்களின் அயராத உழைப்பு, மற்றும் பெற்றோரின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு ஆகியவையே முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

இந்தக் கௌரவிப்பு நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினர் (SDEC), மாணவர்களின் பெற்றோர்கள், பிரதி மற்றும் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விச் சமூகத்தினர் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவர்களை வாழ்த்தியமை குறிப்பிடத்தக்கது