Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் அமுலாகும் புதிய நடவடிக்கை

Posted on September 18, 2026 by Admin | 95 Views

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப் பட்டி (Seat belt) அணிவது இன்று (19) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஆசனப் பட்டிகள் இல்லாத வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

உற்பத்தியின்போதே ஆசனப் பட்டிகள் பொருத்தப்படாத பழைய வாகனங்களுக்கு, அதனைப் பொருத்திக் கொள்வதற்காக அரசாங்கத்தினால் நான்கு தடவைகள் வர்த்தமானி ஊடாக சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்ததாகவும், அந்த சலுகைக் காலம் இன்றுடன் நிறைவடைவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதன்படி, ஆசனப் பட்டிகள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு மாத்திரமே இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என அவர் வலியுறுத்தினார்.

சுமார் ஒரு வருடமாக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலம் நிறைவடைவதைத் தொடர்ந்து, இச்சட்டம் இன்று (19) முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.

முன் இருக்கை மாத்திரமன்றி, வாகனத்தின் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் கட்டாயம் ஆசனப் பட்டிகளை அணிந்திருக்க வேண்டும். நாளை முதல் ஆசனப் பட்டி அணியாமல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக எவ்வித பாரபட்சமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

ஆசனப் பட்டிகளை அணியாமையால் விபத்துகள் மற்றும் அபாயங்கள் அதிகரிப்பதாகச் சுட்டிக்காட்டிய பொலிஸார், அபராதம் விதிப்பதையோ சட்ட நடவடிக்கை எடுப்பதையோ இலக்காகக் கொண்டு இத்திட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனத் தெளிவுபடுத்தினர். சாரதிகள் மற்றும் பயணிகளின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இச்சட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, ஆசனப் பட்டிகள் இல்லாத வாகனங்களில் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய முயற்சித்து அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டாம் எனப் பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.