சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்புப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சவூதி அரசரிடம் இராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூலக் கோரிக்கையை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இளைஞரான சிவராசா அனோஜனின் பெற்றோருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு உறுதியளித்தார்.
குறித்த இளைஞனுக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் இயன்றளவு முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இதற்காகச் சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் அரசாங்கம் முழுமையான தலையீடுகளைச் செய்யும் எனவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், மேன்முறையீடுகளைச் சமர்ப்பித்தல் உள்ளிட்ட விடயங்களில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக இதுவரை எடுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் குறித்து இதன்போது பெற்றோருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. குறித்த நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாகவும் மிகவும் நெருக்கமாகவும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி இளைஞரின் பெற்றோரிடம் மேலும் குறிப்பிட்டார்.


