ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களுக்கான அபிவிருத்திக் குழுத் தலைவராகச் செயற்படும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அப்பதவியிலிருந்து நீக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவரது நியமனத்தைத் தொடர்ந்து குறித்த பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி மற்றும் நிர்வாகச் செயற்பாடுகள் திருப்திகரமான மட்டத்தில் இல்லை என அரசாங்கத்தின் உயர்மட்டத்திற்குத் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மக்கள் நலன் சார்ந்த செயற்றிட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுப்பதில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நிலையில் இந்த மந்தகதியிலான செயற்பாடுகள் கட்சி மேலிடத்தின் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.
தேசியப் பட்டியல் ஊடாக எம்.பி. ஆதம்பாவா பாராளுமன்றத்திற்கு நுழைந்திருந்த போதிலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் எந்தவொரு சபையையும் கைப்பற்றவில்லை.
இவரது பிராந்திய மட்டத்திலான பலவீனமான அணுகுமுறைகளும், வினைத்திறனற்ற செயற்பாடுகளுமே இத்தோல்விக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களுக்கான அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவிகளில் இருந்து அவரை உடன் நீக்குவதற்கான ஆரம்பக்கட்ட நகர்வுகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் உறுதிப்படுத்தினார்.
எதிர்பார்த்த அபிவிருத்தி இலக்குகளை அடையத் தவறும் பட்சத்தில் எவராயினும் பொறுப்புவாய்ந்த பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் தயங்காது என்ற கடுமையான செய்தியை இந்த நகர்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் நிர்வாகம், பொறுப்புக்கூறல் மற்றும் வினைத்திறன் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து வரும் நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை ஏனைய மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக அமையும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த நகர்வுகளின் தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டத்தில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஏனைய பிராந்தியப் பொறுப்புகளிலும் விரைவில் மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்ட அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கத் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் புதிய நியமனங்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.