சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் ‘டிரஸ்ஸிங் ரூம்’ இரகசியங்கள் கசிந்ததாகவும் ஆட்ட நிர்ணயச் சதி (Match-fixing) இடம்பெற்றுள்ளதாகவும் பிரபல புலனாய்வு ஊடகமான ‘தெஹல்கா’ வெளியிட்ட இரகசிய காணொளியால் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் தீர்க்கமான முடிவெடுக்க சி.எஸ்.கே. நிர்வாகம் இன்று (25) அவசரக் கூட்டமொன்றைக் கூட்டியுள்ளது.
‘தெஹல்கா’ ஊடகம் வெளியிட்டுள்ள இரகசிய காணொளியில் (Sting Operation), முன்னாள் ரஞ்சி வீரரான ரஷித் பாட்டியா பல அதிர்ச்சியூட்டும் தகவல்களைத் தெரிவித்துள்ளார். சி.எஸ்.கே. அணியில் இடம்பெற்றிருந்த டெல்லியைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவர் ஊடாக விளையாடும் பதினொருவர் (Playing XI) குறித்த விபரங்கள் முன்கூட்டியே லண்டன் சூதாட்டத் தரகர்களுக்கு விற்கப்பட்டதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு போட்டிக்கு 60 இலட்சம் இந்திய ரூபா வீதம் 5 போட்டிகளுக்கு மொத்தமாக 3 கோடி ரூபா கைமாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.
இந்தப் பாரதூரமான குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்வதற்காக சி.எஸ்.கே. நிர்வாகம் உடனடியாகச் செயற்பட்டுள்ளது. “எமது வருடாந்தப் பொதுக்குழு கூட்டம் இன்று (25) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக எமது நிர்வாகக் குழு கூடி, இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடி உரிய தீர்மானங்களை மேற்கொள்ளும்” என சி.எஸ்.கே. அணியின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டில் குறிப்பிடப்படும் டெல்லி வீரர் 2025ஆம் ஆண்டு சி.எஸ்.கே. அணியில் இடம்பெற்றிருந்த விக்கெட் காப்பாளர் வன்ஷ் பேடி (Vansh Bedi) என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.
எனினும் இத்தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். “ரஷித் பாட்டியா குறிப்பிடும் சி.எஸ்.கே. வீரர் நானல்ல. எனக்கும் இந்தச் சூதாட்டக் குற்றச்சாட்டுகளுக்கும் எள்முனையளவேனும் தொடர்பில்லை” என வன்ஷ் பேடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை டெல்லி பிரீமியர் லீக் தொடரிலும் ஆட்ட நிர்ணயச் சதி இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை டெல்லி கிரிக்கெட் சங்கம் ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளது. எவ்வாறாயினும் இன்றைய தினம் நடைபெறவுள்ள சி.எஸ்.கே. நிர்வாகக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ள முடிவுகள் கிரிக்கெட் இரசிகர்கள் மற்றும் விளையாட்டு வட்டாரங்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.