Top News
| அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் தளபாட மோசடியா? போலிச் செய்திக்கு SDEC கடும் கண்டனம் | | பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் | | ATM, CDM இயந்திரங்களுக்கு அருகில் புதிய மோசடி: பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை |
Oct 16, 2026

பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு

Posted on October 15, 2026 by Admin | 47 Views

அம்பாறை மாவட்டத்தின் பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலயத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் வெள்ள அனர்த்தப் பிரச்சினைக்குத் தீர்வாக பாடசாலையில் வடிகான்களை நிர்மாணிப்பதற்காக 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்வி, உயர்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை குறித்த பாடசாலை எதிர்கொள்ளும் பாரிய நெருக்கடிகள் தொடர்பில் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

ஒவ்வொரு மழைக்காலத்திலும் இப்பாடசாலை வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் வெள்ள நீர் பாடசாலைக் கட்டடங்களுக்குள் உட்புகுவதனால் பாரிய சேதங்கள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. பாடசாலை வளாகத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் முற்றாகத் தடைப்படுவதுடன், மாணவர்களும் ஆசிரியர்களும் பாடசாலையை விட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

இதனைக் கருத்திற்கொண்டு பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலயத்தில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த முறையான வடிகானமைப்பை ஏற்படுத்துவதற்கான விசேட ஏற்பாடுகளைச் செய்யுமாறும் அத்துடன் மூன்று மாடிக் கட்டடமொன்றை நிர்மாணித்துத் தருமாறும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

இக்கோரிக்கையினைத் தொடர்ந்து இது தொடர்பாக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்ட பதில் அறிக்கை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விரிவாக ஆராயப்பட்டது. அந்த அறிக்கையின்படி பாடசாலைக்குள் வெள்ள நீர் உட்புகுவதைத் தடுக்கும் வகையிலான வடிகான் நிர்மாணப் பணிகளுக்காகவே மேற்படி 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் முதற்கட்டமாக முன்னெடுக்கப்படும் இந்த வடிகான் அமைக்கும் பணிகளூடாக வெள்ள நீரைக் கட்டுப்படுத்தியதன் பின்னர் பாடசாலைக்கான புதிய வகுப்பறைக் கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் கட்டாயம் முன்னெடுக்கப்படும் எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.