2024/25 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் (National Productivity Awards) போட்டியில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த அட்டாளைச்சேனை ஸஹ்ரா வித்தியாலயம் தனது முதல் முயற்சியிலேயே ‘பாராட்டுப் பரிசினை’ (Commendation Award) வென்று சாதனை படைத்துள்ளது.
க.பொ.த. சாதாரண தரம் வரையான அரச பாடசாலைகள் பிரிவில் ஸஹ்ரா வித்தியாலயம் இப்போட்டியில் களமிறங்கியிருந்தது. தேசிய அளவிலான இப்போட்டியில் முதன்முறையாகப் பங்குபற்றிய போதிலும் அதற்கான செயற்றிட்டங்களை மிகவும் நேர்த்தியாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுத்து இந்த உயரிய தேசிய மதிப்பீட்டை இப்பாடசாலை பெற்றுக்கொண்டுள்ளது.
பாடசாலையின் இந்த மகத்தான சாதனை அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் மற்றும் ஒட்டுமொத்த கல்விச் சமூகத்தினர் மத்தியிலும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமது கன்னி முயற்சியிலேயே தேசிய மட்டத்தில் பாடசாலைக்குப் பெருமை தேடித்தந்த பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இந்த வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த அனைத்துத் தரப்பினருக்கும் கல்விமான்கள், ஊர்ப்பிரமுகர்கள் எனப் பலரும் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.