Top News
| அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் தளபாட மோசடியா? போலிச் செய்திக்கு SDEC கடும் கண்டனம் | | சர்வதேச விஞ்ஞான ஒலிம்பியாட்டில் நாட்டுக்குப் பெருமை சேர்த்த அக்கரைப்பற்று அல்-முனவ்வரா மாணவி அனாபா | | பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் |
Oct 17, 2026

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் தளபாட மோசடியா? போலிச் செய்திக்கு SDEC கடும் கண்டனம்

Posted on October 16, 2026 by Admin | 71 Views

அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்கு பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு (SDEC) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளவாறு எவ்வித சம்பவமும் பாடசாலையில் இடம்பெறவில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள அக்குழு இத்தகைய விஷமத்தனமான செயல்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் ஐ.எல். ஜலீல் (றியாஸ்) இன்று (16) விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“நேற்றைய தினம் (15) முகநூல் (Facebook) ஊடாக ‘அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் மோசடி – மோசடி அம்பலம்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை. பாடசாலையில் அவ்வாறானதொரு சம்பவமோ அல்லது எந்தவொரு முறைகேடோ இடம்பெறவே இல்லை என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

குறித்த போலிச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களுக்கும் எமது பாடசாலை நிர்வாகத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. பாடசாலையில் இடம்பெறாத ஒரு கற்பனையான விடயத்தை பாடசாலையின் பெயரைப் பயன்படுத்தி நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் விஷமிகளால் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட ஒரு முற்றுமுழுதான வதந்தியே இதுவாகும்.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் மிகவும் சிறந்த முறையில் இயங்கி வரும் ஒரு முன்மாதிரியான பாடசாலையாக அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் திகழ்கின்றது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த (சாதாரண தர) பரீட்சைகளில் எமது பாடசாலை மாணவர்கள் தொடர்ச்சியாகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பிரதேசத்திற்கும் கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர்.

மேலும், பாடசாலைக்குரிய அனைத்து பௌதீக வளங்களும், தளபாடங்களும் மற்றும் உபகரணங்களும் முறையான பதிவேடுகளில் பதியப்பட்டு, அரச கணக்காய்வு மற்றும் கல்வித் திணைக்களத்தின் நேரடி வழிகாட்டல்களுக்கு அமைவாக மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் பாதுகாப்பாகப் பேணப்பட்டு வருகின்றன. எமது பாடசாலையில் எந்தவொரு பொருளுக்கும் குறைபாடோ அல்லது மோசடியோ நிகழவில்லை என்பது உத்தியோகபூர்வ பதிவேடுகளின் ஊடாகத் தெளிவாகின்றது.

உண்மை நிலை இவ்வாறிருக்க பாடசாலைக்கும் குறித்த செய்திக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாத நிலையில் பாடசாலையின் கல்வி வளர்ச்சியையும் நற்பெயரையும் சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பொறுப்பற்ற விதத்தில் போலியான தலைப்பிட்டு வதந்திகளைப் பரப்புவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே, பொதுமக்களும், பெற்றோர்களும், பழைய மாணவர்களும் பாடசாலையுடன் தொடர்பற்ற இத்தகைய ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

பாடசாலையின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் இத்தகைய பொய்யான தகவல்களை உருவாக்கிப் பரப்பிய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சட்டத்தரணிகளுடன் இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்” என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.