Top News
| இரண்டு வருடங்கள் கடந்தும் நிர்மாணிக்கப்படாத அட்டப்பள்ளம் பாலம்! நாளை பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்.பி. கேள்வி | | தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி அப்துல் முனாஸின் புதல்வர் அய்யாஸ் பொறியியல் பட்டம் பெற்றார் | | அட்டாளைச்சேனை அல்-ஜென்னாஹ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.ஐ.எம்.றியாஸ் கடமையேற்பு |
Oct 24, 2026

இறக்காமம் நீதிமன்றம் தொடர்பில் நாளை பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புகிறார் உதுமாலெப்பை எம்.பி

Posted on October 20, 2026 by Admin | 108 Views

இறக்காமம் பிரதேசத்துக்கான நீதிமன்ற நடவடிக்கைகளை மீண்டும் அக்கரைப்பற்று நீதிமன்றத்துடன் இணைப்பது அல்லது அப்பிரதேசத்துக்கெனத் தனியான சுற்றுலா நீதிமன்றமொன்றை அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை நாளை (21) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளார்.

சபை ஒத்திவைப்பு வேளையின்போதான கேள்வியாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிடம் அவர் இது குறித்த விளக்கத்தைக் கோரவுள்ளார்.

12 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் சுமார் 18,000 சனத்தொகையையும் கொண்ட இறக்காமம் பிரதேசத்தில் 94 சதவீதத்துக்கும் அதிகமானோர் தமிழ் பேசும் மக்களாவர். எனினும் எவ்வித முன்னறிவித்தலுமின்றி இறக்காமம் நீதிமன்ற நடவடிக்கைகள் சிங்கள மொழிப் பயன்பாட்டிலுள்ள அம்பாறை நீதிமன்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இதனால் தமிழ் பேசும் மக்கள் சிங்கள மொழியில் வழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், வாக்குமூலங்கள் மற்றும் ஏனைய சட்ட ஆவணங்களை மொழிபெயர்ப்பதற்காக மேலதிக பணத்தையும் நேரத்தையும் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சினைக்குத் தீர்வாக இறக்காமம் நீதிமன்ற நடவடிக்கைகளை மீண்டும் அக்கரைப்பற்று நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டும் அல்லது இறக்காமம் பிரதேசத்துக்கெனத் தனியான சுற்றுலா நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்ற தீர்மானம் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு நீதியமைச்சின் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இவ்விடயம் தொடர்பாகக் கடந்த 2025 ஜூன் 17ஆம் திகதி நடைபெற்ற நீதியமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் ஒரு வருடத்துக்கும் மேலாகியும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதேவேளை இறக்காமத்தில் சுற்றுலா நீதிமன்றம் இயங்குவதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிச் செயலாளர் இசுரு தெரிவித்திருந்த போதிலும், அவ்வாறானதொரு நீதிமன்றம் இதுவரை அங்கு அமைக்கப்படவில்லை என இறக்காமம் பிரதேச செயலாளரும் பிரதேச சபைத் தவிசாளரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையிலேயே, இவ்விடயத்துக்கு உரிய தீர்வு கோரி உதுமாலெப்பை எம்.பி. நாளை பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளார்.