Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 20, 2026

74 சுகாதாரப் பிரிவுகளில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு வாரம்

Posted on November 8, 2026 by Admin | 115 Views

நாட்டில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாகக் காணப்படும் 74 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளைக் இலக்கு வைத்து நாளை (09) முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை ‘விசேட டெங்கு ஒழிப்பு வாரம்’ முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த காலங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, நுளம்புகளின் பெருக்கம் மற்றும் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மாற்றங்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே இந்தத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வார காலப்பகுதியில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களைக் கண்டறிந்து அழித்தல், சுற்றுப்புறங்களைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படவுள்ளன. குறிப்பாக வீடுகள், வெற்றுக் காணிகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பிரிவேனாக்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் விசேட பரிசோதனைகளும் சிரமதானப் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவுடன் இணைந்து உள்ளூராட்சி நிறுவனங்கள், ‘Clean Sri Lanka’ செயலகம், பொலிஸார், முப்படையினர் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இந்தத் தேசியப் பணியில் களமிறங்கவுள்ளன.

இதேவேளை டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் நாளாந்தம் மதிப்பீடு செய்யப்படுவதுடன் நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் நுளம்புகளின் பெருக்கம் குறித்து தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

ஆரம்பத்தில் இம்மாதம் 02ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த இந்த விசேட வேலைத்திட்டம் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நாளை (09) முதல் 14ஆம் திகதி வரை பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனவே டெங்கு அபாயத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் வகையில் பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்கக்கூடிய பாத்திரங்கள், பழைய டயர்கள், போத்தல்கள் மற்றும் சிரட்டைகள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றி, நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கப் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.