ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராகச் செயற்பட்டு வந்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா பல பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுக்கான ஒருங்கிணைப்புக் குழுத் (DCC) தலைவர் பதவியிலிருந்து ஆதம்பாவா எம்.பி. நீக்கப்பட்டு அப்பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல மீமன சுகத் ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்புதிய நியமனத்தை உறுதிப்படுத்தும் வகையில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திர அவர்களினால் கடந்த நவம்பர் 02ஆம் திகதி (2026.11.02) வெளியிடப்பட்ட பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கான அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்திற்கு அமைய புதிய தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல மீமன சுகத் ரத்னாயக்க தலைமையில் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு நாவிதன்வெளி பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களைத் துரித கதியில் வினைத்திறனுடன் முன்னெடுப்பதில் தற்போதைய அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. இருப்பினும் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா தலைமை வகித்த கரையோரப் பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி மற்றும் நிர்வாகச் செயற்பாடுகள் திருப்திகரமான மட்டத்தில் அமையவில்லை என அரசாங்கத்தின் உயர்மட்டத்திற்குத் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
தேசியப் பட்டியல் ஊடாக அவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்த போதிலும் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலும் மேலதிகமாக அபிவிருத்திக்குழுத் தலைவராக அவர் தலைமை வகித்த ஏனைய பிரதேசங்களிலும் உள்ள எந்தவொரு சபையையும் தேசிய மக்கள் சக்தியினால் கைப்பற்ற முடியாமல் போனது இவரது பிராந்திய மட்டத்திலான பலவீனமான அணுகுமுறைகளும், மந்தகதியிலான செயற்பாடுகளுமே இத்தோல்விக்குப் பிரதான காரணங்கள் எனக் கட்சி மேலிடம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையிலேயே நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைமைப் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த அரசியல் நகர்வின் தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டத்தில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஏனைய பிராந்தியப் பொறுப்புகளிலும் வெகுவிரைவில் பாரிய மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் இந்த அதிரடித் தீர்மானம் அம்பாறை மாவட்ட அரசியல் களத்தில் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
